×

விவசாயிகள் போராட்டத்துக்கு விளையாட்டு வீரர்கள் ஆதரவு: பத்மஸ்ரீ, அர்ஜூனா விருதுகளை திருப்பித் தர முடிவு

டெல்லி: மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக பத்மஸ்ரீ, அர்ஜுனா விருது பெற்றவர்கள் உள்பட பல முன்னாள் விளையாட்டு வீரர்கள் தங்கள் விருதுகளை திருப்பித் தருவதாகக் கூறியுள்ளனர். மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து போராட்டம் நடத்தி வரும் பஞ்சாப், அரியானா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள், டெல்லியில் சிங்கு, திக்ரி எல்லையில் நேற்றும் 6வது நாளாக முற்றுகையிட்டனர். இப்போராட்டம் மத்திய அரசுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளதால், விவசாயிகளை டிசம்பர் 3ம் தேதி நிபந்தனையற்ற பேச்சுவார்த்தைக்கு வரும்படி அழைத்தது.

ஆனால், முன்கூட்டியே நேற்று நடந்த பேச்சுவார்த்தையில் ‘வேளாண் சட்டத்தால் விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது, ஏற்கனவே இருந்த குறைந்தபட்ச ஆதார விலை, உள்ளூர் மண்டிகள் முறை தொடரும்,’ என மத்திய அரசு தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. அதோடு, வேளாண் சட்டங்கள் தொடர்பான பிரச்னைகள் குறித்து ஆய்வு நடத்தி 5 பேர் கொண்ட குழுவை அமைக்கலாம் எனயோசனை தெரிவித்தது. ஆனால், ஏற்க மறுத்த விவசாயிகள், வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தனர். இதனால், 3 மணி நேரமாக நடந்த பேச்சுவார்த்தை எந்த முடிவும் எட்டப்படாமல் தோல்வியில் முடிந்தது. இந்நிலையில் எல்லையில் தொடர்ந்து 7-வது நாளாக போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் பத்மஸ்ரீ மற்றும் அர்ஜுனா விருது பெற்ற மல்யுத்த வீரர் கர்தார் சிங், அர்ஜுனா விருது பெற்ற கூடைப்பந்து வீரர் சஜ்ஜன் சிங் சீமா மற்றும் அர்ஜுனா விருது பெற்ற ஹாக்கி வீரர் ராஜ்பீர் கவுர் உள்ளிட்ட பல விளையாட்டு வீரர்களும் டிசம்பர் 5-ம் தேதி டெல்லிக்குச் சென்று தங்கள் விருதுகளை ராஷ்டிரபதி பவனுக்கு வெளியே வைப்பதாக தெரிவித்துள்ளனர். மேலும் விவசாயிகள் டெல்லிக்குச் செல்வதைத் தடுக்க போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுக்கு எதிராக தண்ணீர் பீய்ச்சியடிக்கும் பீரங்கிகள் மற்றும் கண்ணீர்ப்புகை குண்டுகளைப் பயன்படுத்தியதாக அவர்கள் மத்திய அரசையும், ஹரியானா அரசையும் கண்டித்துள்ளனர். இது தொடர்பாக பேசிய சஜ்ஜன் சிங் சீமா; நாங்கள் விவசாயிகளின் பிள்ளைகள், அவர்கள் கடந்த பல மாதங்களாக அமைதியான போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

ஒரு வன்முறை சம்பவம் கூட நடக்கவில்லை. ஆனால், அவர்கள் டெல்லிக்குச் செல்லும்போது அவர்களுக்கு எதிராக நீர் பீரங்கிகள் மற்றும் கண்ணீர்ப்புகைக் குண்டுகள் பயன்படுத்தப்பட்டன. எங்கள் பெரியவர்கள் மற்றும் சகோதரர்களின் தலைப்பாகைகள் தூக்கி எறியப்பட்டால், எங்கள் விருதுகள் மற்றும் கவுரவத்துடன் நாங்கள் என்ன செய்யப்போகிறோம்? நாங்கள் எங்கள் விவசாயிகளுக்கு ஆதரவாக இருக்கிறோம். அதனால்தான் விருதுகளை திருப்பித் தருகிறோம்என்று கூறினார். டெல்லி எல்லையில் டிசம்பர் 5 ம் தேதி விவசாயிகளின் போராட்டத்தில் பல முன்னாள் வீரர்களும் சேருவார்கள் என்றும் இவர்கள் கூறியுள்ளனர்.


Tags : Athletes ,Arjuna ,Padmasree , Athletes support farmers' struggle: Decision to return Padmasree, Arjuna awards
× RELATED விடுதலை சிறுத்தைகள் கட்சி துணைப்...