சாதிவாரி கணக்கெடுப்புக்கு அனைத்து தரப்பு மக்களிடமும் கருத்து கேட்க வேண்டும்: எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் பேட்டி.!!!

சென்னை: சாதிவாரி கணக்கெடுப்புக்கு அனைத்து தரப்பு மக்களிடமும் கருத்து கேட்க வேண்டும் என்று எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் எடப்பாடிபழனிசாமி நேற்று வெளியிட்ட அறிக்கையில், தமிழ்நாட்டில் பல்வேறு அரசியல் கட்சிகளும், சமுதாய அமைப்புகளும் சாதி வாரியான கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என பல்வேறு காலக்கட்டங்களில் கோரிக்கைகளை வைத்து வருகின்றனர். மேலும், 69 சதவீத இட ஒதுக்கீடு சம்பந்தமான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், இவ்வழக்கையும் எதிர்கொள்ள இத்தகைய புள்ளி விபரங்கள் தேவைப்படுகின்றன.

இக்கோரிக்கைகளை நிறைவேற்ற தற்போதைய காலக்கட்டத்தில் உள்ள சாதிவாரியான அளவிடக்கூடிய முழுமையான புள்ளிவிவரங்கள் அவசியம் தேவைப்படுகிறது. எனவே, தமிழ்நாடு முழுவதும் சாதிய அடிப்படையிலான புள்ளிவிவரத்தை சேகரிப்பதால் மட்டுமே முழு தகவல் கிடைக்கப் பெறும். சாதி வாரியான தற்போதைய நிலவரப்படியான புள்ளிவிவரங்களை சேகரிக்கும் வழிமுறைகளை ஆராய்ந்து, அதன் அடிப்படையில் உரிய தரவுகளை சேகரித்து, அறிக்கை சமர்ப்பிக்க அதற்கென பிரத்யேக ஆணையம் ஒன்று அமைக்கப்படும் என்றார்.

இந்நிலையில், சென்னை கொத்தவால்சாவடியில் விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் பிரச்சார பயணத்தின் போது செய்தியாளர்களிடம் பேட்டியளித்த தென் சென்னை திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், சாதிவாரி கணக்கெடுப்பு குறித்த கேள்விக்கு பதிலளித்தவர், சாதிவாரி கணக்கெடுப்புக்கு முன்னர் அனைத்து தரப்பு மக்களிடமும் கருத்து கேட்க வேண்டும் என்று கூறினார்.

பாமக போரட்டம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு, பாமக போரட்டம் என்பது அரசும் பாமகவும் பேசி தீர்த்துக்கொள்ள வேண்டிய விஷயம் என்றார். விவசாயிகளின் போராட்டம் குறித்த கேள்விக்கு, விவசாயிகளின் போராட்டத்தால் டெல்லி ஸ்தம்பித்துபோய் உள்ளது. கனடா பிரதமர் கூட விவசாயிகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்திருக்கிறார். தன்னை தானே விவசாயி என கூறிக்கொள்ளும் முதல்வர் இது குறித்து கருத்து தெரிவிக்கவில்லை. ஆனால் திமுக வேளாண் திருத்தச் சட்டங்களை தொடர்ந்து எதிர்த்து வருகிறது என்றார்.

மேலும் விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் பிரச்சார பயணத்திற்கு மக்கள் தரும் ஆதரவு வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக-வின் வெற்றியை உறுதிப்படுத்தியுள்ளது என்று கூறினார்.

Related Stories: