×

பூதலூர் அருகே சோழர்கால ஜேஷ்டா தேவி சிற்பம் கண்டுபிடிப்பு

தஞ்சை: பூதலூர் அருகே 10ம் நூற்றாண்டை சேர்ந்த சோழர்கால ஜேஷ்டாதேவி சிற்பம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. தஞ்சை மாவட்டம் பூதலூர் அருகே அடஞ்சூர் கிராமத்தில் அனந்தீசுவரர் கோயில் உள்ளது. இந்த கோயிலின் திருச்சுற்று வெளிபிரகாரத்தில் பூமியில் பாதியளவு புதைந்த நிலையில் 4 அடி உயரம், 3 அடி அகலம் கொண்ட ஜேஷ்டாதேவியின் புடைப்பு சிற்பம் கண்டறியப்பட்டது.

இதுகுறித்து தஞ்சை சரஸ்வதி மகால் நூலக தமிழ் பண்டிதர் மணிமாறன் கூறுகையில், கண்டெடுக்கப்பட்ட ஜேஷ்டாதேவி சிற்பத்தின் இருபுறமும் மகன் குளிகன் எனப்படும் மாந்தன், மகள் மாந்தி ஆகிய இருவரின் புடைப்பு சிற்பங்களும், மேற்புறத்தில் காக்கை, துடைப்பம் உருவங்கள் உள்ளன. இந்த ஜேஷ்டாதேவி சிலை சோழர் காலத்திய சிலை என தெரியவந்துள்ளது.

கி.பி. 7ம் நூற்றாண்டு முதல் 10ம் நூற்றாண்டு வரை தமிழகத்திலும், கர்நாடகத்திலும் ஜேஷ்டாதேவியை தாய் கடவுளாக வணங்கினர். திருப்பரங்குன்றம் குடைவரை கோயிலில் ஜேஷ்டாதேவிக்கு தனி கருவறை அமைந்துள்ளது. கி.பி. 773-ம் ஆண்டு ஜேஷ்டாதேவி உருவத்தையும் கோயிலையும் பாண்டிய மன்னன் மாறன் சடையனின் தளபதி சாந்தன் கணபதியின் மனைவி நக்கன் கொற்றி என்பவள் நிறுவியதாக கல்வெட்டில் குறிப்படப்பட்டுள்ளது. பாண்டியரை அடுத்து பல்லவரும், சோழரும் ஜேஷ்டாதேவியின் உருவங்களை செதுக்கினர். ஜேஷ்டாதேவிக்கென தனிக்கோயில் ஒன்றை திருச்சி மாவட்டம் அன்பனூரில் முதலாம் ராஜராஜசோழன் நிறுவினார் என்றார்.

Tags : Chola Jashta Devi ,Puthalur , Sculpture
× RELATED பூதலூரில் முதியவர் பைக்கில் ரூ.1.50லட்சம் திருட்டு