×

நிவர் புயலில் வேரோடு சாய்ந்தவை: தாவரவியல் பூங்காவில் மீண்டும் நடப்பட்ட பழமையான மரங்கள்

புதுச்சேரி: தாவரவியல் பூங்காவில் நிவர் புயலின்போது வேரோடு சாய்ந்த சில பழமை வாய்ந்த மரங்கள் மீண்டும் அதே இடத்தில் கிரேன், பொக்லைன் உதவியுடன் நடப்பட்டன. புதுச்சேரியை நிவர் புயல் கடந்த 25ம்தேதி தாக்கிய நிலையில் சாலையோரம் இருந்த மரங்கள் வேரோடு சாய்ந்தன. சில பகுதிகளில் மரக்கிளை முறிந்து நடுரோட்டில் விழுந்தன. அவற்றை பொதுப்பணி, நகராட்சி, தீயணைப்பு, காவல்துறையினர் உடனே வெட்டி அகற்றினர். பின்னர் பொக்லைன் இயந்திரம் மூலம் கட்டைகள் அகற்றப்பட்டு போக்குவரத்து முற்றிலும் சரி செய்யப்பட்டன.

இதனிடையே புதுச்சேரி தாவரவியல் பூங்காவில் இருந்த 200, 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த சில மரங்களும் நிவர் புயல் சூறாவளியில் வேரோடு சாய்ந்தன. அவற்றின் மரக்கிளைகளை இயந்திரம் மூலம் ஊழியர்கள் வெட்டி அப்புறப்படுத்திய நிலையில், ராட்சத மரத்தின் வேர் அடிப்பகுதியை மீண்டும் அதே இடத்தில் நட்டு வளர்க்க வேளாண் அதிகாரிகள் முடிவு செய்தனர்.

இதற்காக நேற்று ராட்சத கிரேன், பொக்லைன் இயந்திரம் அங்கு வரவழைக்கப்பட்டு 200 ஆண்டு பழமையான மகுடம் மரம் அதே இடத்தில் நடப்பட்டது. மேலும் 100 ஆண்டுகள்களை கடந்த மேலும் சில மரங்களும் அதே இடத்தில் குழிதோண்டி நடப்பட்டன. இப்பணியை வேளாண்துறை அதிகாரிகள், ஊழியர்கள் முன்னின்று மேற்கொண்டனர். இதேபோல் பூரணாங்குப்பம் உள்ளிட்ட சில இடங்களில் நிவர் புயலில் சாய்ந்த பழமை வாய்ந்த மரங்களை சமூக ஆர்வலர்கள் மீண்டும் அதே இடத்தில் குழிதோண்டி நட்டது குறிப்பிடத்தக்கது.

Tags : Nivar Storm ,botanical garden , Nivar storm
× RELATED ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் கம்பி...