×

ஸ்டெர்லைட் ஆலையை இடைக்காலமாக திறக்க வேண்டும் என்ற வேதாந்தா நிறுவனத்தின் கோரிக்கையை நிராகரித்தது உச்சநீதிமன்றம்..!

டெல்லி: ஸ்டெர்லைட்  ஆலையை இடைக்காலமாக திறக்க வேண்டும் என்ற வேதாந்தா நிறுவனத்தின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்தது. தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி போராட்டம் மற்றும் துப்பாக்கி சூடு நடந்ததை தொடர்ந்து, அந்த ஆலையை மூடுமாறு தமிழக அரசு கடந்த 2018-ம் ஆண்டு மே 28-ந் தேதி உத்தரவிட்டது. இதை எதிர்த்து தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வேதாந்தா நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இதை விசாரித்த தீர்ப்பாயம், ஸ்டெர்லைட் ஆலையால் மக்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என்று ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வால் குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில், ஆலையை மீண்டும் திறக்க உத்தரவு பிறப்பித்தது.

இந்த நிலையில், தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், ஆலையை மீண்டும் திறக்க இடைக்கால தடை விதித்தது. அத்துடன், இந்த வழக்கை விசாரிக்க தேசிய பசுமை தீர்ப்பாயத்துக்கு அதிகாரம் இல்லை என கூறிய உச்சநீதிமன்றம், இந்த விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகுமாறு வேதாந்தா நிறுவனத்துக்கு அறிவுறுத்தியது.

ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக்கோரியும் வேதாந்தா நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட், ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதிக்க முடியாது என்று கடந்த ஆகஸ்ட் மாதம் தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து ஸ்டெர்லைட் நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இதனையடுத்து, ஸ்டெர்லைட் ஆலையில் பராமரிப்பு பணி காரணமாக தற்காலிகமாக திறக்க வேண்டும் என்ற வேதாந்தா நிறுவனத்தின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்தது.


Tags : Supreme Court ,plant ,Vedanta ,Sterlite , Sterlite Plant, Vedanta Company, Supreme Court
× RELATED மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு...