×

உடல்நிலை சரியில்லாததால் பெண்ணை டோலி கட்டி 17 கி.மீ தூக்கி வந்த அவலம்

பெரியகுளம்: பெரியகுளம் அருகே 40 ஆண்டாக சாலை வசதியில்லாத மலைக்கிராமத்தை சேர்ந்த உடல்நிலை சரியில்லாத பெண்ணை, டோலி கட்டி உறவினர்கள் 17 கிமீ தூரம் சுமந்து வந்து அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே, கும்பக்கரை அருவிக்கு மேல் வெள்ளகெவி மலைக்கிராமம் உள்ளது. ஆங்கிலேயர்கள் இந்த மலைக்கிராமம் வழியாகச் சென்றுதான் கொடைக்கானலை உருவாக்கினர். இந்த மலைக்கிராமத்துக்கு சாலை வசதியில்லை. 1980ல் பெரியகுளம் கும்பக்கரை அருவி முதல் வெள்ளகெவி மலை வரை 17 கி.மீ தூரத்திற்கு சாலை அமைக்க ரூ.97 லட்சம் ஒதுக்கி திட்டம் தீட்டப்பட்டது. இதன்படி, கும்பக்கரை அருவிக்கு மேல் வவ்வாத்துறை என்னும் இடத்தில் பாலம் கட்டும் பணி நிறைவடைந்து, சாலை அமைக்கும் பணி தொடங்கியது. ஆனால், அதன்பின் கிடப்பில் போடப்பட்டது.

இதனால் 40 ஆண்டுகளாக மலைக்கிராம மக்கள் நோய்வாய்பட்டாலும், மகப்பேறு காலங்களிலும் டோலி கட்டி, அவர்களை தூக்கி வந்து பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சேர்க்கின்றனர். நேற்று வெள்ளகெவி மலைக்கிராமத்தை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு உடல்நிலை சரியில்லாததால், அவரை டோலி கட்டி 17 கி.மீ தூக்கி வந்து பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சாலைப்பணியை விரைந்து முடித்து தங்கள் மலைக்கிராமத்துக்கு போக்குவரத்து வசதியை உருவாக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

Tags : Dolly
× RELATED தமிழ்நாட்டில் கோடிக்கணக்கான பணம்...