பொது சொத்துக்கு சேதம் ஏற்படுத்திய வன்னியர் சங்கத்தை தடை செய்ய வேண்டும்..!! சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு

சென்னை: பாமக நடத்திய போராட்டத்தில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்பட்டதாக உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.  போராட்டத்தில் பொது சொத்துக்கு சேதம் ஏற்படுத்தியதாக பத்திரிக்கையாளர் வாராஹி  முறையிட்டுள்ளார். போராட்டம் நடத்திய வன்னியர் சங்கத்தை தடை செய்ய ஐகோர்ட்டில் வாராஹி என்பவர் முறையீடு செய்துள்ளார். மேலும் போராட்டத்திற்கு அழைப்புவிடுத்த ராமதாஸ் மற்றும் அன்புமணி ஆகியோர் மீது வழக்கு பதிய கோரிக்கை விடுத்துள்ளார். வன்னியர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 20 சதவிகித இடஒதுக்கீடு வழங்க கோரி, பாமக மற்றும்  வன்னியர் சங்கத்தினர், சென்னையில் நேற்று போராட்டம் நடத்தினர்.

சென்னை வந்த பாமகவினரின் வாகனங்களை தடுப்புகள் அமைத்து காவல்துறையினர் தடுத்தனர். இதனால் பா.ம.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் 4 மணி நேரம் போக்குவரத்து முடங்கியது.  போராட்டக்காரர்கள் வன்முறையிலும் ஈடுபட்டனர். பெருங்களத்தூரில் ரெயில் தண்டவாளத்தில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்ட போராட்டக்காரர்கள், அந்த வழியாக வந்த எக்ஸ்பிரஸ் ரெயில் மீது கற்களை வீசி அதை தடுத்து நிறுத்தினர். சென்னையின் பல்வேறு இடங்களில் பாமகவினர் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டனர். பாமகவினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அன்புமணி ராமதாஸ், ஜி.கே.மணி, ஏ.கே.மூர்த்தி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், பொதுமக்களுக்கு இடையூறு செய்ததுடன், பொதுச்சொத்துக்களை சேதப்படுத்திய பாமகவினர் மீது நடவடிக்கை கோரியும்,  போராட்டம் நடத்திய வன்னியர் சங்கத்தை தடை செய்ய கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று முறையீடு செய்யப்பட்டது. அப்போது இந்த முறையீட்டை மனுவாக தாக்கல் செய்தால், அதை எந்த அமர்வு விசாரிக்கும் என்பதை பதிவுத்துறை முடிவு செய்யும் என நீதிபதி தெரிவித்தார். இதனையடுத்து பாமக மற்றும் வன்னியர் சங்கத்திற்கு எதிராக மனு தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: