நிவர் புயலில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சரவணன் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம்; முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

சென்னை:  நிவர் புயலில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சரவணன் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். நிவர் புயல் காரணமாக, அரசு கடும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தது. எனினும், எதிர்பாராமல் கன மழை காரணமாக  நான்கு பேர் உயிரிழந்தனர். அவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொண்டு, அவர்களது குடும்பங்களுக்கு  4 லட்சம் ரூபாய் மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்தும், 6 லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்தும், ஆக மொத்தம் தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணமாக வழங்க நான் 27.11.2020 அன்றே உத்தரவிட்டிருந்தேன்.

தற்போது, விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், கெங்காவரம் கிராமத்தைச் சேர்ந்த திரு. தனபால் என்பவரின் மகன் திரு. சரவணன் என்பவர் வரவேற்பு பந்தலில் காற்று அடித்து கம்பம் சரிந்ததில், மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன். மின்சாரம் தாக்கி உயிரிழந்த திரு. சரவணன் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த திரு. சரவணன் அவர்களின் குடும்பத்திற்கு 4 லட்சம் ரூபாய் மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்தும்,  6 லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்தும் ஆக மொத்தம் 10 லட்சம் ரூபாய் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன் என தெரிவித்துள்ளார்.

Related Stories:

>