வங்கக்கடலில் பாம்பனுக்கு 530 கி.மீ. தொலைவில் புரெவி புயல்; பாம்பன் துறைமுகத்தில் 7 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

சென்னை: வங்க கடலில் கடந்த 24-ந்தேதி நிவர் புயல் உருவாகி, மறுநாள் அதிகாலை 2.30 மணியளவில் புதுச்சேரிக்கும், மரக்காணத்துக்கும் இடையே கரையை கடந்தது. இதனால் வடமாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியது. அதன் தொடர்ச்சியாக மீண்டும் வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. கடந்த மாதம் 28-ந்தேதி வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாகவும், தொடர்ச்சியாக தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவெடுத்து புயலாக வலுப்பெற்று இருக்கிறது. இந்த புயலுக்கு ‘புரெவி’ என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.

இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தென்காசி, ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய அதி கனமழையும், புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், மதுரை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், அரியலூர், பெரம்பலூர் மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கன முதல் மிக கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியதாவது; வங்கக்கடலில் உருவான புரெவி புயல் பாம்பனுக்கு 530  கி.மீ. தொலைவில் நிலைகொண்டுள்ளது.

திரிகோணமலைக்கு 300 கி.மீ., கன்னியாகுமரிக்கு 700 கி.மீ. தொலைவிலும் புரெவி புயல் மையம் கொண்டுள்ளது. புரெவி புயல் 6 மணி நேரத்தில் மேலும் வலுவடையும். இன்று மாலை அல்லது இரவில் திரிகோணமலை அருகே கரையை கடக்கிறது. கரையை கடந்த பின் புரெவி புயல் நகர்ந்து மன்னார் வளைகுடா அருகே நாளை காலை வருகிறது. 12 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வரும் புயல் கரையை கடக்கும்போது 95 கி.மீ. வேகத்தில் காற்று வீச வாய்ப்பு உள்ளது. நாளை மறுநாள் அதிகாலை குமரி-பாம்பன் இடையே தென் தமிழக கடற்கரையில் புரெவி புயல் கரையை கடக்கும். கரையை கடந்த பின் புரெவி புயல் நகர்ந்து மன்னார் வளைகுடா அருகே நாளை காலை வருகிறது.

Related Stories: