×

டெல்லி வீட்டுவசதி கொள்கையின் கீழ் 4,000 பேரிடம் 400 கோடி மோசடி: வெளிநாட்டுக்கு தப்ப முயன்றவர் கொச்சி ஏர்போர்ட்டில் சிக்கினார்

புதுடெல்லி: வீடு வாங்க விரும்பிய பலரிடம் இருந்து 400 கோடி வரை பணம் பெற்று ஏமாற்றிவிட்டு மாலத்தீவுக்கு தப்ப முயன்ற 36  வயது நபரை  கொச்சி விமான நிலையத்தில் வைத்து போலீசார் கைது செய்தனர். துவாரகாவில் வசிக்கும் ஹரேந்தர் தோமர் என்பவர், டெல்லி மேம்பாட்டு ஆணையத்தின் கொள்கை முடிவின்படி வீடு வழங்குவதாக கூறி, நிலம்  பதிவுச் செலவு என்ற பெயரில் சுமார் 4,000 வீட்டு உரிமையாளர்களிடமிருந்து 400 கோடிக்கு மேல் வசூலித்தார். பின்னர் வீட்டுக்கான நிலத்தை  வழங்காமல் ஏமாற்றி வந்தார். நெருக்கடி அதிகரிக்கவே வெளிநாடு தப்பிச்செல்ல முயன்றபோது, கொச்சின் விமான நிலையத்தில் அவரை போலீசார்  கைது செய்தனர். பின்னர் தோமரிடம் நடத்தப்பட்ட விசாரணை விவரங்கள் குறித்து பொருளாதார குற்றப்பிரிவு இணை கமிஷனர் ஓபி மிஸ்ரா கூறியதாவது: கைது  செய்யப்பட்ட தோமர் தனது கூட்டாளிகளுடன் இணைந்து “ஸ்ரீ சித்தி விநாயக் ரியல் எஸ்டேட் மற்றும் செக்கயூரிட்டிஸ்” என்ற பெயரில் ஒரு  நிறுவனத்தை உருவாக்கினார். பின்னர், விவசாயிகளிடமிருந்து நிலத்தை வாங்கி, பின்னர் அதை ரெவந்தா சொசைட்டிக்கு கொள்முதல் விலையை  காட்டிலும் மூன்று மடங்கு லாபத்தில் விற்றார்.

இதற்கான தொகையாக, ரேவந்தா சொசட்டியின் கணக்குகளில் இருந்து சுமார்  120 கோடி ரூபாய்” ஸ்ரீ சித்தி விநாயக் ரியல் எஸ்டேட் மற்றும்  செக்யூரிட்டிஸ் நிறுவன “கணக்கில் மாற்றப்பட்டது.  ஆனால், இந்ததொகைக்காக வெறுமனே  11.77 ஏக்கர் நிலம் மட்டுமே ரேவந்தா சொசைட்டிக்கு  மாற்றப்பட்டது. இந்த மோசடி தொடர்பாக புகாரின்பேரில் தோமரை போலீசார் தேடி வந்தனர். இதனால், நஜாப்கரில் உள்ள ரோன்புரா பகுதி வீட்டை  விற்றுவிட்டு தலைமறைவானார். இந்நிலையில் தான் அவர் மாலத்தீவிற்கு தப்பிச்செல்ல முயன்றபோது கேரள மாநிலம் கொச்சி ஏர்போர்ட்டில் சிக்கினார். அவரிடம் தொடர்ந்து  விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் ஏற்கனவே மூன்று பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

Tags : Delhi ,airport ,Kochi , Under the Delhi Housing Policy 400 crore scam to 4,000 people: who tried to escape abroad Trapped at Cochin Airport
× RELATED ஆன்லைன் வர்த்தகம் செய்வதாக கூறி ரூ.2.60 கோடி மோசடி