×

வேளாண் சட்டங்களுக்கு எதிராக தமிழகத்திலும் போராட்டம் தீவிரப்படுத்த டெல்டா விவசாயிகள் முடிவு: தீர்வு கிடைக்காவிட்டால் தேர்தலில் எதிரொலிக்கும் என எச்சரிக்கை

திருச்சி: வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியை அடுத்து தமிழகத்திலும் போராட்டத்தை தீவிரபடுத்த டெல்டா விவசாயிகள் முடிவு செய்துள்ளனர். மத்திய அரசின் வேளாண் சட்டங்களை வாபஸ் பெற கோரி, டெல்லி எல்லைகளில் பஞ்சாப், ராஜஸ்தான், அரியானா, மத்திய பிரதேசம் உள்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் கடந்த 6 நாட்களாக இரவு பகலாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவாகவும், வேளாண் சட்டங்களை திருப்ப பெறக்கோரி தமிழகத்திலும் அடுத்தடுத்து போராட்டம் நடந்த விவசாய சங்கங்கள் முடிவு செய்துள்ளனர்.  இதுகுறித்து தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு கூறுகையில், எங்களுக்காக போராட டெல்லி செல்லவும் விடவில்லை. தமிழகத்திலும் போராடவும் விடவில்லை. போராட்டம் நடத்த உரிமை கோரி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளேன்.

விவசாயி என்று கூறிக்கொள்ளும் முதல்வர் பச்சை துண்டு போட்டு ஏமாற்றுகிறார். டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக டெல்லி செல்ல அனுமதிக்க வேண்டும். இல்லை என்றால் சென்னை தலைமை செயலகம் முன் அல்லது திருச்சி கலெக்டர் அலுவலகம் முன் போராட்டம் நடத்த உள்ளோம். விவசாயிகளின் பிரச்னைக்கு தீர்வு கிடைக்காவிட்டால் இதன் விளைவு வரும் சட்டமன்ற தேர்தலில் எதிரொலிக்கும் என்றார். தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் பி.ஆர்.பாண்டியன் கூறுைகயில், மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என தமிழக அரசு உடனடியாக மத்திய அரசிடம் வலியுறுத்த வேண்டும். டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், வேளாண் சட்டங்களை மத்திய அரசு வாபஸ் பெற வலியுறுத்தியும் தமிழகத்தில் போராட்டத்தை தீவிரப்படுத்த உள்ளோம் என்றார்.

தமிழக ஏரி, ஆற்றுபாசன விவசாயிகள் சங்க மாநில தலைவர் விஸ்வநாதன் கூறுகையில், ஒட்டு மொத்த விவசாயிகளின் குரலை, மத்திய அரசு செவி கொடுத்து கேட்காமல் உள்ளது. இது கண்டனத்துக்குரியது.  வேளாண் சட்டங்களை வாபஸ் பெறாவிட்டால் தமிழகம் முழுவதும் விவசாயிகளை திரட்டி டெல்லி போராட்டத்தில் பங்கேற்போம் என்றார்.Tags : Delta ,elections ,Tamil Nadu , Delta farmers decide to intensify struggle against agricultural laws in Tamil Nadu: Warns of election repercussions if solution is not found
× RELATED டெல்டாவில் விடிய விடிய மழை 50,000 ஏக்கர் சம்பா சாய்ந்து சேதம்: விவசாயிகள் கவலை