சிறைத்தண்டனை வழங்குவதைப்போல கூண்டுக்குள் சிலைகளை வைத்து அவமதிப்பதா? நீதிபதிகள் வேதனை

மதுரை: அனுமதியில்லாத சிலைகளை அகற்றக் கோரிய வழக்கில், சிறைத்தண்டனை வழங்குவதுபோல கூண்டுக்குள் சிலைகளை வைத்து அவமதிக்கின்றனர் என ஐகோர்ட் கிளை நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர். தஞ்சையைச் சேர்ந்த வைரசேகர், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘தமிழகத்தில் பல இடங்களில் தலைவர்களின் சிலைகள் உரிய அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ளன. பல இடங்களிலுள்ள சிலைகளால் சமூக ஒற்றுமை பாதிக்கிறது. பிறந்தநாள் மற்றும் நினைவு நாளன்று கூடும் கூட்டத்தால் பிரச்னை எழுகிறது. சில இடங்களில் பிரச்னையை தவிர்க்க சிலைகளுக்கு போலீசார் 24 மணிநேர பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். எனவே, அனுமதியில்லாத சிலைகளை அகற்றவும், அனுமதியுடன் வைக்கப்பட்டுள்ள சிலைகளிலுள்ள ஏணிப்படியை அகற்றவும் உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.

மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி ஆகியோர், ‘‘மரியாதையை வெளிப்படுத்தும் விதமாகவே சிலைகள் வைக்கப்படுகின்றன. ஆனால், சமீபகாலமாக சிலைகளை கூண்டுக்குள் வைத்து அவமதிக்கும் வகையில் சிறை தண்டனை வழங்குவதைப் போலவும் உள்ளன. சிலர் தங்களின் ஆதாயத்திற்காக சிலைகளுக்கு மரியாதை செய்கின்றனர். அப்போது போக்குவரத்து நிறுத்தப்படுவதால், பொதுமக்களும் பாதிக்கின்றனர்’’ என்றனர். பின்னர் மனுவுக்கு தமிழக அரசு தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை டிச. 14க்கு தள்ளி வைத்தனர்.

Related Stories: