×

மாவட்ட கவுன்சில் தேர்தல் 2ம் கட்ட வாக்குப்பதிவு காஷ்மீர் மக்கள் மந்தம்

ஜம்மு: ஜம்மு காஷ்மீரில் 2வது கட்ட மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல் நேற்று நடைபெற்றது. ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல் மற்றும் பஞ்சாயத்து இடைத்தேர்தல் வருகிற 19ம் தேதி வரை 8 கட்டங்களாக நடைபெறுகிறது. கடந்த 28ம் தேதி முதல் கட்ட தேர்தல் நடந்தது. இதில், 52 சதவீத வாக்கு பதிவானது. நேற்று 2ம் கட்ட தேர்தல் நடைபெற்றது. காஷ்மீரில் 25, ஜம்முவில் 18 என மொத்தம் 43 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில், மொத்தம் 321 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இவர்களில் 196 பேர் காஷ்மீர், 126 பேர் ஜம்முவை சேர்ந்தவர்கள். காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு, பிற்பகல் 2 மணிக்கு முடிந்தது.  

இதை தவிர பஞ்சாயத்து தலைவர் பதவிக்கான இடைத்தேர்தல் 83 தொகுதிகளில் நடந்தது. இதில், 151 ஆண் வேட்பாளர்கள், 72 பெண் வேட்பாளர்கள் என மொத்தம் 223 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். தீவிரவாதிகள் அச்சுறுத்தல் காரணமாக பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.எந்த இடத்திலும் அசம்பாவிதங்கள் நடைபெறவில்லை. முதல் கட்ட தேர்தலில்  மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்த நிலையில், நேற்று அதிக ஆர்வம் காட்டவில்லை. வாக்குப்பதிவு மிகவும்  மந்தமாகவே இருந்தது. 49 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவானது.


Tags : District Council ,Election ,Phase Voting ,Kashmir People , District Council Election 2nd Phase Voting Kashmir Recession
× RELATED தேர்தலில் வெற்றி பெற ஒற்றுமையாக உழைக்க வேண்டும்