69% இடஒதுக்கீடு வழக்கில் புள்ளி விவரம் சமர்ப்பிக்க சாதிவாரி கணக்கெடுப்புக்கு தனி ஆணையம்: தமிழக அரசு அறிவிப்பு

* சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அரசியல் கட்சிகளும், சமுதாய அமைப்புகளும் நீண்டநாட்களாக கோரிக்கை.

* அரசின் நல திட்டங்கள் அனைத்து பிரிவினருக்கும் சென்றடைவதை உறுதிபடுத்த வேண்டியுள்ளது.

* இடஒதுக்கீடு வழக்கிற்காகவும் ஜாதிவாரி புள்ளிவிவரம் தேவை.

சென்னை: தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த பிரத்யேக ஆணையம் அமைக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி கூறியுள்ளார். கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும், அனைத்து சமூகத்தினரின் பிரதிநிதித்துவம் குறித்த விவரங்களை வெளியிட வலியுறுத்தியும் பாமக சார்பில் நேற்று சென்னை டிஎன்பிஎஸ்சி அலுவலகம் முன்பு முற்றுகைப் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இந்தப் போராட்டத்துக்கு போலீசார் அனுமதி மறுத்தனர். அதைத் தொடர்ந்து சென்னைக்கு வந்த பாமகவினர் கைது செய்யப்பட்டனர். இதனால் பல இடங்களில் மறியல் போராட்டம் நடந்தது. ரயில் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. சென்னை நகர் முழுவதும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பல மணி நேரம் தாமதத்திற்கு பிறகுதான் போக்குவரத்து சரியானது.

இந்தநிலையில், போராட்டம் நடத்திக் கொண்டிருந்த பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணியை, பேச்சுவார்த்தைக்கு வருமாறு முதல்வர் அலுவலகத்தில் இருந்து அழைப்பு சென்றது. அதைத் தொடர்ந்து பாமக மூத்த தலைவர்களுடன் சென்ற அவர், முதல்வர் எடப்பாடி பழனி சாமியை சந்தித்துப் பேசினார். அப்போது இதே கோரிக்கையை அன்புமணி வலியுறுத்தினார். இந்தப் பேச்சுவார்த்தையின்போது, மூத்த அமைச்சர்களும் உடன் இருந்தனர்.இந்தப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:தமிழ்நாட்டில் பல்வேறு அரசியல் கட்சிகளும், சமுதாய அமைப்புகளும் சாதி வாரியான கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என பல்வேறு காலக்கட்டங்களில் கோரிக்கைகளை வைத்து வருகின்றனர். அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.  இதன் பயன் அனைத்து பிரிவினருக்கும் சென்றடைவதை அரசு உறுதிபடுத்த வேண்டியுள்ளது.

மேலும், 69 சதவீத இடஒதுக்கீடு சம்பந்தமான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், இந்த வழக்கையும் எதிர்கொள்ள இத்தகைய புள்ளி விபரங்கள் தேவைப்படுகின்றன.  இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற தற்போதைய காலக்கட்டத்தில் உள்ள சாதிவாரியான அளவிடக்கூடிய முழுமையான புள்ளிவிவரங்கள் அவசியம் தேவைப்படுகிறது. எனவே, தமிழ்நாடு முழுவதும் சாதிய அடிப்படையிலான புள்ளிவிவரத்தை சேகரிப்பதால் மட்டுமே முழு தகவல் கிடைக்கப் பெறும். சாதி வாரியான தற்போதைய நிலவரப்படியான புள்ளி விவரங்களை சேகரிக்கும் வழிமுறைகளை ஆராய்ந்து, அதன் அடிப்படையில் உரிய தரவுகளை சேகரித்து, அறிக்கை சமர்ப்பிக்க அதற்கென பிரத்யேக ஆணையம் ஒன்று அமைக்கப்படும்.

ஜெயலலிதா வழியில் செயல்படும், தமிழக அரசும் அதே உறுதியில் செயல்பட்டு சமூக நீதியை நிலைநாட்ட அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். இந்த அறிவிப்புக்குப் பிறகு, அறிக்கை வெளியிட்ட பாமக நிறுவனர் ராமதாஸ், அரசின் இந்த அறிவிப்பு தனக்கு முழுமையான மனநிறைவைத் தரவில்லை என்று கூறியுள்ளார். ஆனால் தேர்தல் நேரத்தில் பாமக இந்த போராட்டத்தை கையில் எடுத்திருப்பதும், தற்போது ஆணையம் அமைக்கப்பட்டுள்ளதும், தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: