காற்றழுத்த தாழ்வு மண்டலம் புரெவி புயலாக மாறியது தமிழகத்தில் 6 மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’: வானிலை ஆய்வு மையம் தகவல்

மக்கள் வெளியே வர வேண்டாம்: முதல்வர்

* நீர் நிலைகளின் ஓரம் மற்றும் கடற்கரை ஓரங்களில் மக்கள் கூட வேண்டாம். மீனவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்ப ஏற்பாடு செய்ய வேண்டும்.

* பாதிப்பு உள்ளாகக்கூடிய பகுதிகளில் உள்ள மக்களை நிவாரண முகாம் களுக்கு உடனடியாக அழைத்துச் செல்ல வேண்டும்.

* மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம். டிசம்பர் 4ம் தேதி வரை பெரும் மழை பெய்யும் என்பதால் எச்சரிக்கை விடுக்கப்பட்ட மாவட்ட மக்கள் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும்.

* அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் போர்க்கால அடிப்படையில் எடுக்கப்பட்டு வருவதால் பொதுமக்கள் புயல் குறித்து எந்தவித அச்சமும் அடைய தேவையில்லை. அரசின் அறிவுரைகளுக்கு மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

* மின்கம்பிகள், தெரு விளக்கு கம்பங்கள், மின் மாற்றிகள் ஆகியவற்றிற்கு மிக அருகில் செல்லவோ, தொடவோ வேண்டாம்.

* புயல் காரணமாக, இன்று முதல் 4ம் தேதி வரை தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும். வட தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் கன மழை பெய்யக்கூடும். எனவே தென் மாவட்ட மக்கள் வெளியில் வரவேண்டாம்.

சென்னை: வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுப்பெற்று நேற்று இரவு புரெவி புயலாக மாறியது. அது 4ம் தேதி குமரி-பாம்பன் இடையே கரையை கடக்கும். இதனால் 6 மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’ விடப்பட்டுள்ளது.  தெற்கு அந்தமான் அருகே வங்கக் கடலில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு உருவான காற்றழுத்தம் வலுப்பெற்று தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகியுள்ளது. தற்போது வடக்கு மற்றும் வட மேற்கு திசையில் நகர்ந்து வந்து கொண்டு இருக்கிறது. நேற்றைய நிலவரப்படி இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இலங்கையில் திரிகோணமலைக்கு கிழக்கு மற்றும் தென் கிழக்கே 400 கிமீ தொலைவிலும், கன்னியாகுமரிக்கு கிழக்கு மற்றும் தென் கிழக்கே 800 கிமீ தொலைவிலும் நிலை கொண்டு இருந்தது. இதன் காரணமாக தென் மாவட்டங்களில் சில இடங்களில் நேற்று மழை பெய்தது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் மேலும் வலுப்பெற்று தமிழக கடலோரப் பகுதிக்கு நெருங்கி வந்து, நேற்று இரவு புயலாக மாறியது.

இதற்கு புரெவி என பெயரிடப்பட்டுள்ளது. இன்று அது மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து இலங்கை அருகே திரிகோண மலையை கடந்து நாளை காலை மன்னார் வளைகுடா வழியாக 4ம் தேதி அதிகாலை கன்னியாகுமரி-பாம்பன் இடையில் தமிழக கடற்கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக சிவகங்கை, ராமநாதபுரம், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மாவட்டங்களில் இன்று இயல்பு நிலைக்கும் அதிகமான மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த மாவட்டங்–்களுக்கு ரெட் அலர்ட் விடப்பட்டு,  துறை ரீதியான கண்காணிப்பு பணிகளை தொடங்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, புதுக்கோட்டை, விருதுநகர், மதுரை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், காரைக்கால், மயிலாடு துறை, கடலூர், அரியலூர், பெரம்பலூர், பகுதிகளில் ஒருசில இடங்களில் மிக கனமழை பெய்யும். காஞ்சிபுரம், திருவள்ளூர், நாமக்கல், கரூர், திண்டுக்கல் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, புயல் மன்னார் வளைகுடா வழியாக சென்று கன்னியாகுமரி அருகே தெற்கு அரபிக் கடல் பகுதிக்கு செல்லும் வாய்ப்புள்ளது. அதனால் நாளை (3ம்தேதி) கன்னியாகுமரி, திருநெல்வேலி, ராமநாதபுரம், தூத்துக்குடி, தென்காசி, சிவகங்கை மாவட்டங்களில் அதிகப்படியான மழை பெய்யும் என்பதால் 3ம் தேதியும் ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது. கொளச்சல் முதல் சென்னை வரை உள்ள 11 துறைமுகங்களில் உள்ளூர் புயல் எச்சரிக்கை கூண்டு 3ம் எண் ஏற்றப்பட்டுள்ளது.

இன்றும் நாளையும் இலங்கையை ஒட்டிய கடலோரப் பகுதிகளில் இரண்டு நாட்களுக்கு கடல் பகுதியில் மணிக்கு 60 முதல் 80 கிமீ வேகத்தில் காற்று வீசும் என்பதால் அந்த  பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

முதல்வர் ஆலோசனை: இது தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேற்று சென்னை, தலைமை செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, ஜெயக்குமார், கே.பி.அன்பழகன், ஆர்.பி.உதயகுமார், தலைமை செயலாளர் சண்முகம், மற்றும் பல்வேறு துறை சார்ந்த ஐஏஎஸ் அதிகாரிகள், போலீஸ் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: