ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல்: சென்னை உயர் நீதிமன்றத்துக்கு புதிதாக 10 நீதிபதிகள் நியமனம்: மொத்த எண்ணிக்கை 63 ஆக உயர்வு

புதுடெல்லி: சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கூடுதலாக 10 நீதிபதிகளை நியமித்து, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் வழங்கியுள்ளார். இதன் மூலம், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளின் மொத்த எண்ணிக்கை 63 ஆக உயர்ந்துள்ளது.சென்னை உயர் நீதிமன்றத்தின் மொத்த நீதிபதிகள் ஒதுக்கீடு 75. தற்போது 53 நீதிபதிகள் மட்டுமே உள்ளனர். 22 இடங்கள் காலியாக உள்ளன. இந்நிலையில்,புதிய உயர் நீதிமன்ற நீதிபதிகளை நியமிப்பதற்கான பட்டியலை, உச்ச நீதிமன்றத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் பரிந்துரை செய்தது. அதில், ‘மாவட்ட நீதிபதிகள் ஜி.சந்திரசேகரன், ஏ.ஏ.நக்கீரன், சிவஞானம் வீராசாமி, இளங்கோவன் கணேசன், ஆனந்தி சுப்பிரமணியன், கண்ணம்மாள் சண்முக சுந்தரம், சாத்திகுமார் சுகுமார குருப், முரளி சங்கர் குப்புராஜூ, மஞ்சுளா ராஜராஜூ நல்லய்யா, தமிழ் செல்வி டி.வளையாம்பாளையம் ஆகியோர் இடம் பெற்றனர்.

இந்நிலையில், உயர் நீதிமன்றத்தின் இந்த பரிந்துரை பட்டியலுக்கு உச்ச நீதிமன்றம் கடந்த செப்டம்பர் 23ம் தேதி ஒப்புதல் அளித்தது. இதைத் தொடர்ந்து, பட்டியலில் இடம் பெற்றுள்ள 10  மாவட்ட நீதிபதிகளையும், சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகளாக நியமனம் செய்ய, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று ஒப்புதல் வழங்கி உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து, அனைவரும் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி முன்னிலையில் விரைவில் பதவியேற்க உள்ளனர். இதன் மூலம், தற்போது 53 ஆக இருக்கும் உயர் நீதிமன்றத்தின் மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை 63 ஆக உயர்ந்துள்ளது. இதனால், நீண்ட காலமாக நிலுவையில் இருக்கும் பல்வேறு முக்கிய வழக்குகள் அனைத்தும் விரைந்து முடிக்கப்படும் என தெரிய வந்துள்ளது.

Related Stories: