டெல்லியில் விவசாயிகளுடன் மத்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி: உயர்மட்ட குழு அமைக்கும் பரிந்துரை நிராகரிப்பு

புதுடெல்லி: மத்திய வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் 6வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுடன், மத்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து போராட்டம் நடத்தி வரும் பஞ்சாப், அரியானா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள், டெல்லியில் சிங்கு, திக்ரி எல்லையில் நேற்றும் 6வது நாளாக முற்றுகையிட்டனர். இப்போராட்டம் மத்திய அரசுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளதால், விவசாயிகளை டிசம்பர் 3ம் தேதி நிபந்தனையற்ற பேச்சுவார்த்தைக்கு வரும்படி அழைத்தது. ஆனால், முன்கூட்டியே நேற்று பேச்சுவார்த்தை நடத்த மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் அழைத்தார்.

இந்த அழைப்பை ஏற்று 35 விவசாய சங்க பிரதிநிதிகள் நேற்று மதியம் டெல்லி விக்யான் பவனில் நடந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர். இதில், மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர், ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல், வர்த்தக இணை அமைச்சர் சோம் பிரகாஷ் ஆகியோர் பங்கேற்றனர். முன்னதாக, 3 அமைச்சர்களும் மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங் மற்றும் பாஜ தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோருடன் தீவிர ஆலோசனை நடத்தினர்.

அதைத் தொடர்ந்து, விவசாய சங்க பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடந்தது. இதில், ‘வேளாண் சட்டத்தால் விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது, ஏற்கனவே இருந்த குறைந்தபட்ச ஆதார விலை, உள்ளூர் மண்டிகள் முறை தொடரும்,’ என மத்திய அரசு தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது.

அதோடு, வேளாண் சட்டங்கள் தொடர்பான பிரச்னைகள் குறித்து ஆய்வு நடத்தி 5 பேர் கொண்ட குழுவை அமைக்கலாம் எனயோசனை தெரிவித்தது. ஆனால், ஏற்க மறுத்த விவசாயிகள், வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தனர். இதனால், 3 மணி நேரமாக நடந்த பேச்சுவார்த்தை எந்த முடிவும் எட்டப்படாமல் தோல்வியில் முடிந்தது. கூட்டத்திற்குப் பின் பேட்டி அளித்த பாரத் கிஷான் சங்க தலைவர் ஜோகிந்தர் சிங், ‘‘இன்றைய கூட்டத்தில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. அடுத்த கட்டமாக டிசம்பர் 3ம் தேதி (நாளை) பேச்சுவார்த்தை நடத்த அரசு அழைப்பு விடுத்துள்ளது’’ என்றார். மத்திய அமைச்சர் தோமர் கூறுகையில், ‘‘சரியான பாதையில் பேச்சுவார்த்தை நடக்கிறது. விரைவில் முடிவு எட்டப்படும்’’ என்றார்.

* அரியானா பாஜ அரசுக்கு நெருக்கடி

அரியானாவில் ஆளும் பாஜ கூட்டணி அரசுக்கு சுயேச்சை எம்எல்ஏ சோம்பிர் சங்வான் ஆதரவு அளித்து வந்தார். போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக, நேற்று அவர் தனது ஆதரவை வாபஸ் பெற்றார். இதேபோல், விவசாயிகளுடன் நடத்தப்படும் பேச்சுவார்த்தை எடுக்கப்படும் முடிவை பொறுத்து, தேசிய ஜனநாயக கூட்டணியில் தொடர்வது பற்றி முடிவு எடுக்கப்படும் என முக்கிய கூட்டணி கட்சியான ஜேஜேபி கூறி உள்ளது. 90 எம்எல்ஏக்களை கொண்ட அரியானா சட்டப்பேரவையில் பாஜ 40, ஜேஜேபி 10, காங்கிரஸ் கூட்டணி 33 எம்எல்ஏக்களை கொண்டுள்ளன. 7 சுயேச்சைகளில் 5 பேர் பாஜ.வுக்கு ஆதரவு அளித்துள்ளன.

Related Stories: