மூத்த நீதிபதி ரமணா மீது குற்றம்சாட்டிய விவகாரம் ஜெகன் மோகனுக்கு எதிரான எல்லா மனுக்களும் தள்ளுபடி: உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதி என்.வி.ரமணா மீது குற்றச்சாட்டுகளை கூறிய ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட அனைத்து வழக்குகளையும் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதி என்.வி.ரமணா. இவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை தெரிவித்து, தலைமை நீதிபதி எஸ்,ஏ.பாப்டேவிற்கு ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி கடந்த மாதம் கடிதம் எழுதினார். அதில், ‘தெலுங்கு தேசம் கட்சி தலைவரும், ஆந்திர முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடுவுக்கு ஆதரவாக நீதிபதி என்.வி.ரமணா செயல்படுகிறார். ஆந்திர நீதித்துறையின் செயல்பாடுகளில் நேரடியாக தலையிடுகிறார்,’ என்று அவர் குற்றம்சாட்டினார்.

இதைத் தொடர்ந்து, ஜெகன் மோகன் மீது நடவடிக்கை எடுக்கும்படி, உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி வழக்கு தொடர்ந்தார். அதில், ‘நீதிமன்ற மாண்பை குலைக்கும் விதமாக ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை ஜெகன் மோகன் கூறியுள்ளார், இவர் மீது  ஊழல் உட்பட 30க்கும் மேற்பட்ட கிரிமினல் வழக்குகள் உள்ளதால், முதல்வர் பதவியில் இருப்பதற்கே தகுதி இல்லாதவர். அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்,’ என கூறியுள்ளார். இந்த வழக்கு நீதிபதிஎஸ்.கே.கவுல் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்குதான் ஜெகன் மோகன் புகார் கடிதம் எழுதியுள்ளார். அதனால், இது பற்றி தலைமை நீதிபதியே முடிவுகள் எடுப்பார். இதனால், இது தொடர்பான எல்லா மனுக்களும் தள்ளுபடி செய்யப்படுகின்றன,’ என உத்தரவிட்டனர்.

Related Stories:

>