நான் விவசாயி என கூறும் முதல்வர் விவசாயத்தை பாதிக்கும் சேலம் 8 வழி சாலைக்கு அனுமதித்தது ஏன்? உதயநிதி ஸ்டாலின் கேள்வி

திருவாரூர்: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உண்மையான விவசாயி என்றால், பல லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கும் வகையில் சேலம் 8வழிசாலைக்கு அனுமதி கொடுத்து இருப்பாரா என உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார். திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், ‘விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’ நிகழ்ச்சிக்காக திருவாரூர் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக சுற்றுப்பயணம் மேற்கொண்டார். 3வது நாளாக நேற்று திருவாரூர் வ.சோ.ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற மாணவர்கள், மகளிர், பொதுமக்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களுடனான கலந்துரையாடல் கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார்.

அப்போது அவர் பேசியதாவது: கட்சித் தலைவரின் அனுமதியுடன் துவங்கப்பட்ட இந்த தேர்தல் பிரசாரமானது கலைஞர் பிறந்த மண்ணான திருக்குவளையில் துவங்கப்பட்டு, அவர் படித்த பள்ளியில் இன்று (நேற்று) 10வது நாள் பிரசாரம் முடிவுற்றுள்ளது. கடந்த 10 நாட்களில் மீனவர், நெசவாளர், விவசாயிகள், மாணவர், மகளிர் என அனைத்து தரப்பட்டவர்களையும் சந்தித்து அவர்களிடம் கோரிக்கை மனு பெறப்பட்டுள்ளன. இந்த கோரிக்கைகள் அனைத்தும் திமுக ஆட்சி அமைந்தவுடன் நிறைவேற்றப்படும்.

டெல்லியில் விவசாய சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து ஏற்கனவே திமுக குரல் கொடுத்துள்ளது. பிஜேபி கூட்டணியில் இருந்து வந்த அகாலி தள அமைச்சர் கூட பதவி விலகியுள்ளார். ஆனால் அடிமை அதிமுகவோ ராஜ்யசபாவில் எதிர்ப்பு தெரிவித்து விட்டு வாக்கெடுப்பின் போது ஆதரவு அளித்துள்ளது. கார்ப்பரேட் பெரும் முதலாளிகளுக்காக கொண்டு வரப்பட்டுள்ள இந்த வேளாண் சட்டங்கள் மட்டுமின்றி விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள் கூட தனியார் மயமாக்கப்பட்டு வருகின்றன.

இதேபோல் தமிழகத்தில் 10 ஆண்டுகால ஊழல் ஆட்சியில் தற்போதைய முதல்வரான பழனிசாமி எதற்கெடுத்தாலும், என்ன கேட்டாலும் நான் ஒரு விவசாயி என்று கூறிவருகிறார். அவர் ஒரு உண்மையான விவசாயி என்றால் பல லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கும் வகையில் சேலம் 8 வழி சாலைக்கு அனுமதி கொடுத்து இருப்பாரா. இது மட்டுமின்றி தான் படிப்படியாக வளர்ந்தவர் என்று கூறுகிறார். இவர் மேஜைக்கு அடியில் ஊர்ந்து ஊர்ந்து யார் காலை பிடித்து வளர்ந்தவர் என்று நாட்டு மக்களுக்கு தெரியும். எனவே இந்த அடிமை ஊழல் ஆட்சியினை அகற்றுவதற்கு தமிழக மக்கள் முடிவு செய்துவிட்டனர். திமுக ஆட்சி அமைந்தவுடன் சட்ட ரீதியான நடவடிக்கை எடுத்து நீட் தேர்வு ரத்து செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: