தொடர்ந்து விலை உயர்ந்து வருகிறது அரசு மணல் குவாரிகளில் முறைகேடு: லாரி உரிமையாளர் சம்மேளன தலைவர் குற்றச்சாட்டு

நாமக்கல்: அரசு மணல் குவாரிகளில் முறைகேடுகள் தொடர்ந்து நடந்து வருவதாக லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் குற்றம்சாட்டியுள்ளார். தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் செல்ல. ராசாமணி நேற்று நாமக்கல்லில் அளித்த பேட்டி: தமிழக அரசு நிர்ணயித்துள்ள விலைக்கு மணல் கிடைப்பதில்லை. ஒரு யூனிட் மணல் தங்கத்தின் விலைக்கு சமமாக விற்கப்படுகிறது என, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி வேதனை தெரிவித்துள்ளார். தமிழகத்தில் தற்போது 1 யூனிட் மணல் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.12 ஆயிரம் வரை விற்கப்படுகிறது. இதற்கு அரசுதான் முழு பொறுப்பேற்க வேண்டும்.

தமிழகம் முழுவதும், 50க்கும் மேற்பட்ட அரசு மணல் குவாரிகள், கடந்த 3 ஆண்டுக்கு முன்பு இயங்கியது. தினமும் 60 ஆயிரம் யூனிட் மணல், அரசு குவாரிகள் மூலம் 1 யூனிட் ரூ.313க்கு லாரிகளுக்கு வழங்கப்பட்டு வந்தது. தற்போது, தமிழகத்தில் வேலூர் மாவட்டம் வடுகன் தாங்கல், தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டி ஆகிய இரு அரசு மணல் விற்பனை நிலையம் மட்டுமே செயல்படுகிறது. தினமும் அதிகபட்சம் 500 யூனிட் மணல் எடுக்கப்படுகிறது. 1 யூனிட் ரூ.1,995க்கு விற்கப்படுகிறது. அதிலும் அரசு ஒப்பந்த வேலைக்கு என்று, சுமார் 100 முதல் 150 யூனிட் மணல் முன்னுரிமை அடிப்படையில் எடுத்துக்கொள்கிறார்கள். குறைந்த எண்ணிக்கையிலான குவாரிகள் செயல்பட்டு வருவதால், இரண்டு மாதத்திற்கு  ஒருமுறை இணையதளத்தில் பதிவுசெய்து பணத்தை செலுத்தி விட்டு லாரி உரிமையாளர்கள் தவிக்க வேண்டியுள்ளது.  

அரசு மணல் குவாரிகளில் நடக்கும் முறைகேடுகளை தடுத்து, உடனடியாக தமிழகம் முழுவதும் அதிக குவாரிகளை திறக்க வேண்டும். அரசு வேலை, பொது வேலைக்கு என்று தனி இணையதள பதிவு இல்லாமல், ஒரே இணையதளம் மூலம் அனைத்து லாரிகளுக்கும் பாகுபாடின்றி மணல் வழங்க வேண்டும். குவாரிகளில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் சில இடங்களில் லாரிகளுக்கு முறைகேடாக அரசு ஒப்பந்த வேலைக்கு என்று இணையதள பதிவு செய்து, கையூட்டு பெற்றுக் கொண்டு மணல் வழங்குவதால், மணல் விலை உயர்ந்துள்ளது. அரசே லாரிகளுக்கு வாடகை நிர்ணயித்தால், அந்த வாடகைக்கு மணல் லாரிகளை இயக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories:

>