உயர் நீதிமன்றம் ஒருதலைபட்சமாக முடிவு எடுத்ததாக கூறும் ஸ்டெர்லைட் ஆலை மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு

புதுடெல்லி: ஸ்டெர்லைட் ஆலையை மூடிய விவகாரத்தில் ஆலை நிர்வாகத்தின் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என தமிழக அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் நேற்று புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டத்தில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து, கடந்த 2018ம் ஆண்டு மே 28ம் தேதி ஸ்டெர்லைட் ஆலையை மூடி சீல் வைத்த தமிழக அரசு, அதற்கான அரசாணையையும் வெளியிட்டது. இதை எதிர்த்து ஸ்டெர்லைட் ஆலையை நடத்தி வரும் வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்குகளில், உச்ச நீதிமன்றமும் தேசிய பசுமை தீர்ப்பாயமும் இடைக்கால உத்தரவுகள் பிறப்பிக்க மறுத்து விட்டன.

இதைத் தொடர்ந்து வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி மறுத்ததோடு, தமிழக அரசின் அரசாணை செல்லும் எனவும் தீர்ப்பு வழங்கியது. இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஸ்டெர்லைட் நிர்வாகம் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. கடந்த முறை நடந்த இதன் விசாரணையின் போது, ஸ்டெர்லைட் ஆலையை திறக்க ஒருபோதும் அனுமதி வழங்க முடியாது என தமிழக அரசு திட்டவட்டமாக தெரிவித்தது. இந்நிலையில், தமிழக அரசின் வழக்கறிஞரான யோகேஷ் கண்ணா, உச்ச நீதிமன்றத்தில் நேற்று புதிய மனுவை தாக்கல் செய்துள்ளார்.

அதில், ‘ஸ்டெர்லைட் ஆலையை மூடியது அரசின் கொள்கை முடிவாகும். இதில், இந்த ஆலை சுற்றுச்சூழலுக்கு கடும் மாசு விளைவிக்கிறது என்பது உறுதிபடுத்தப்பட்டதால் தான், உயர் நீதிமன்றம் அதற்கு சீல் வைக்க உத்தரவிட்டது. மேலும், ஒரு தரப்பின் வாதத்தை கேட்டு ஒருதலைபட்சமாக உயர் நீதிமன்றம் முடிவு எடுத்துள்ளது என்ற ஆலை நிர்வாகத்தின் குற்றச்சாட்டு, கிரிமினல் அவமதிப்பு என்றே கூற வேண்டும். எனவே, இந்த ஒரு காரணத்தை அடிப்படையாக கொண்டே ஸ்டெர்லைட் ஆலையின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்,’ என கூறப்பட்டுள்ளது.

Related Stories: