யுஎஸ் கிரிக்கெட்டில் கேகேஆர் முதலீடு

கொல்கத்தா: அமெரிக்காவில் 2022ல் நடைபெற உள்ள டி20 கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதலீடு செய்ய உள்ளது. அமெரிக்காவில்  பேஸ்பால், கூடைப்பந்து, கால்பந்து விளையாட்டுகள்தான் மிக பிரபலமானவை. அங்கு கிரிக்கெட்டை பிரபலமாக்க, ஆசிய ஐரோப்பிய நாடுகளில் இருந்து புலம் பெயர்ந்தவர்கள் தீவிர முயற்சியில் இருக்கின்றனர். அதன் தொடர்ச்சியாக அமெரிக்காவில் கிரிக்கெட் அணி உருவாக்கப்பட்டு, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அங்கீகாரமும் பெறப்பட்டுள்ளது. கூடவே 2022ம் ஆண்டு பெரிய அளவில் டி20 கிரிக்கெட் போட்டிகளை நடத்த அமெரிக்க கிரிக்கெட் என்டர்பிரைசஸ் (ஏசிஇ) திட்டமிட்டுள்ளது. இந்த போட்டிகள் 2022ல் ஐபிஎல் தொடர் முடிந்த பிறகு தொடங்கப்படும்.

அந்த தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) அணி பெரிய அளவில் முதலீடு செய்ய முடிவு எடுத்துள்ளது. கேகேஆர் உரிமையாளரும் நடிகருமான ஷாருக்கான், ‘நாங்கள் பல ஆண்டுகளாக கேகேஆர் அணியை உலகளவில் விரிவுபடுத்தி வருகிறோம். அமெரிக்காவில் டி20 கிரிக்கெட் போட்டிக்கான வரவேற்பு குறித்து நெருக்கமாக கவனித்து வருகிறோம். மேஜர் கிரிக்கெட் லீகில் எங்களுக்கு சாதகமான விஷயங்கள் இருக்கின்றன என்று நம்புகிறோம். அதனால் ஏசிஇ உடனான இந்த கூட்டு வரும் ஆண்டுகளில் மிகப்பெரிய வெற்றியை பெறும்’ என்று அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நிர்வாகம் ஏற்கனவே ஐபிஎல், சிபிஎல் (வெஸ்ட் இண்டீஸ்), தென் ஆப்ரிக்கா உள்ளூர் டி20 கிரிக்கெட் போட்டிகளில் பங்களிப்பு செய்து வருகிறது. கூடவே இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் நடத்த உள்ள ‘100பந்து’  கிரிக்கெட் தொடரிலும் முதலீடு செய்வது தொடர்பாக கேகேஆர் நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Related Stories: