ஆஸி.யுடன் இன்று கடைசி ஒருநாள்: ஆறுதல் வெற்றிக்கு இந்தியா முனைப்பு

கான்பெரா: ஆஸ்திரேலிய அணியுடனான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில், ஆறுதல் வெற்றியை வசப்படுத்தும் முனைப்புடன் இந்தியா இன்று களமிறங்குகிறது. சிட்னியில் நடந்த முதல் 2 போட்டியிலும் அபாரமாக வென்ற ஆஸ்திரேலிய அணி 2-0 என முன்னிலை பெற்றதுடன் தொடரையும் கைப்பற்றிவிட்டது. இந்நிலையில், கான்பெராவில் இன்று காலை 9.10க்கு தொடங்கும் 3வது போட்டியில் இந்திய அணி ஆறுதல் வெற்றி பெறுமா என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இரண்டு போட்டியிலும் மோசமான பந்துவீச்சே தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்த நிலையில், சைனிக்கு பதிலாக யார்க்கர் ஸ்பெஷலிஸ்டான நடராஜனுக்கு வாய்ப்பு அளிப்பது காலத்தின் கட்டாயமாகி உள்ளது. பூம்ரா அல்லது ஷமிக்கு ஓய்வளித்து, ஷர்துல் தாகூர் சேர்க்கப்படலாம்.

இந்த ஆண்டு தொடக்கத்தில் நியூசிலாந்திடம் 0-3 என்ற கணக்கில் ஒயிட்வாஷ் தோல்வி கண்ட இந்திய அணி, தொடர்ச்சியாக 2வது ஒருநாள் தொடரிலும் அதே வகையிலான தோல்வியை சந்திக்கும் நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளது. இதை தவிர்க்க வேண்டும் என்றால், இந்திய வீரர்கள் அனைத்து வகையிலும் சிறப்பாக செயல்படுவது அவசியம். அதற்கு சரியான வீரர்களை தேர்வு செய்வது அவசியம். கேப்டன் கோஹ்லி இம்முறை அதில் தவறு செய்ய மாட்டார் என நம்பலாம்.

அதே சமயம் ஹாட்ரிக் வெற்றியுடன் தொடரை முழுமையாகக் கைப்பற்ற ஆஸி. அணி வரிந்துகட்டுவதால் ஆட்டம் மிக சுவாரசியமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

Related Stories: