விராத் வந்தா வெரசா எழுப்புபா...

இந்தியா மற்றும் ஆர்சிபி அணியை  விராத் கோஹ்லி வழி நடத்தும் விதம் தொடர்ந்து விமர்சனத்துக்குள்ளாகி வருகிறது. ஆட்டத்திறனில் அதிகம் குறை சொல்ல முடியாவிட்டாலும் விராத்  சதமடித்து ஓராண்டாகப் போகிறது. அதனால், கேப்டன் பதவி என்ற சுமை இல்லாவிட்டால், விராத் இன்னும் சிறப்பாக ஆடுவார் என்பதே எதிர்தரப்பினரின் வாதமாக தொடர்கிறது. எப்படி இருந்தாலும் விராத்தின் அதிரடி ஆட்டத்திற்கான ரசிகர்களின் எண்ணிக்கைக்கு குறைவில்லை. அந்த பட்டியலில் புதிதாக ஒரு குட்டி ரசிகர் சேர்ந்துள்ளார். அது இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாஹனின் மகன் தான். இது குறித்து வாஹன், ‘எனது பையன்  விராத்தின் மிகப்பெரிய ரசிகன். கிரிக்கெட் விளையாடுகிறான்.

அவன் எப்போதும் என்னிடம், விராத் பேட்டிங் செய்ய வந்தா என்னை  எழுப்புப்பா என்று சொல்வான். அவர் அவுட்டாகி வெளியேறினால், டிவியை நிறுத்தி விடுவான். உள்ளே சென்று வேறு ஏதாவது செய்வான். அந்தளவுக்கு விராத்தின் ஆட்டம் சிறுவர்களையும் ஈர்த்துள்ளது. உண்மையில் அவர் ஆடும் விதம் அற்புதமானது. டெஸ்ட், ஒருநாள், டி20 என எல்லா வகையான விளையாட்டிலும் சிறந்த ஆட்டக்காரர். அதில் சந்தேகமேயில்லை. விளையாட்டில் அவர் ஒரு மேதை. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி 3 டெஸ்ட்களில் அவர் இல்லாதது குறித்து கவலைப்படுகிறேன். விராத் இல்லாமல் இந்தியா அந்த 3 டெஸ்ட்களை வெல்லும் என்று தோன்றவில்லை. இந்திய டெஸ்ட் அணிக்கு அவர் மிகவும் முக்கியமானவர்’ என்று கூறியுள்ளார்.

Related Stories: