சுரங்கப்பாதையை கண்டுபிடிக்க பாகிஸ்தான் எல்லைக்குள் 200 மீ. ராணுவம் ஊடுருவல்: பரபரப்பு தகவல்

புதுடெல்லி: ஜம்முவிற்குள் 4 தீவிரவாதிகள் ஊடுருவ முயன்ற பயன்படுத்திய சுரங்கபாதை கண்டுபிடிக்க, பாகிஸ்தானுக்குள் இந்திய ராணுவம் 200 மீட்டர் ஊடுருவி சென்றதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. கடந்த வாரம் ஜம்மு காஷ்மீருக்குள் லாரியில் ஊடுருவ முயன்ற தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினரின் சோதனையின்போது கண்டுபிடிக்கப்பட்டனர். இதனை தொடர்ந்து வீரர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இவர்களிடம் இருந்து ஏகே ரக துப்பாக்கிகள், கையெறி குண்டுகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதி அமைப்பை சேர்ந்த இந்த தீவிரவாதிகள், மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தலை சீர்குலைக்க திட்டமிட்டு ஊடுருவியதும் தெரியவந்தது.

தீவிரவாதிகள் எவ்வாறு ஊடுருவினார்கள் என்பது குறித்து எல்லைப் பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, இந்தியா-பாகிஸ்தான் சர்வதேச எல்லையையொட்டி அமைந்துள்ள சம்பா மாவட்டத்தில் சுரங்கப்பாதை இருப்பதை வீரர்கள் கடந்த 22ம் தேதி கண்டறிந்ததாக உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த சுரங்கப்பாதையை கண்டுபிடிப்பதற்காக பாதுகாப்பு படை வீரர்கள் பாகிஸ்தானின் பிராந்தியத்திற்குள் 200 மீட்டர் தூரம் வரை சென்றனர். இதனை தான் தீவிரவாதிகள் காஷ்மீருக்குள் ஊடுருவ பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டது. பாகிஸ்தான் பகுதிக்குள் இந்திய ராணுவம் 200 மீட்டர் ஊடுருவியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 

Related Stories: