மலேகான் குண்டுவெடிப்பு வழக்கு பாஜ எம்பி பிரக்யா உட்பட 7 பேர் நாளை ஆஜராக வேண்டும்: சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

மும்பை: மலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பாஜ எம்பி பிரக்யா தாகூர் உள்ளிட்ட 7 பேரும், நாளை சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராவதற்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். கடந்த 2008ம் ஆண்டு மலேகானில் நடந்த குண்டுவெடிப்பில் 6 பேர் கொல்லப்பட்டனர்.  100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த குண்டுவெடிப்பில் தற்போதைய பாஜ எம்பி.யான பெண் சாமியார் பிரக்யா சிங் தாகூர், கர்னல் பிரசாத் புரோகித் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கை தேசிய புலனாய்வு ஏஜென்சி விசாரித்து வருகின்றது. கடந்த 2017ம் ஆண்டு மும்பை உயர் நீதிமன்றம் பிரக்யாவிற்கு ஜாமீன் வழங்கியது.

இவர், கடந்த  மக்களவை தேர்தலில் மத்தியப் பிரதேசத்தில் உள்ள போபால் தொகுதியில் பாஜ சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்நிலையில், மலேகான் குண்டுவெடிப்பினால் பாதிக்கப்பட்ட ஒரு குடும்பத்தினர் வழக்கை தினமும் விசாரித்து முடிக்க கோரி சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு தேசிய புலனாய்வு முகமை நீதிமன்ற நீதிபதி பிஆர் சித்ரே முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் ஆஜரான சிறப்பு வழக்கறிஞர் அவினாஷ் ரசல், ‘‘விரைவான விசாரணை நடத்துவதற்கு தயாராக இருக்கிறோம். ஆனால், தற்போது சாட்சிகளை கண்டுபிடிப்பது கடினமான பணியாகும் . மேலும், மனுதாரர்களின் வழக்கறிஞர்கள் ஏதோ ஒரு காரணத்தை கூறி வழக்கை தாமதப்படுத்தி வருகின்றனர்,” என்றார். பின்னர், வழக்கை விசாரித்த நீதிபதி பிஆர் சித்ரே, குற்றம்சாட்டப்பட்ட 7 பேரும் நாளை நீதிமன்றத்தில் ஆஜராகும்படி உத்தரவிட்டார்.

Related Stories:

>