×

‘லவ் - ஜிகாத்’ எதிர்ப்பு சட்டத்தை போன்று மதம், வருமானம், தொழிலை தெரிவித்தால்தான் கல்யாணம்?... அசாமில் வருகிறது புது சட்டம்

கவுகாத்தி: ‘லவ் - ஜிகாத்’ எதிரான சட்டத்தை போன்று புதியதாக திருமணம் செய்து கொள்பவர்கள் தங்களது மதம், வருமானம், தொழிலை தெரிவிக்க வேண்டியது கட்டாயம் என்பது தொடர்பாக அசாமில் புதிய சட்டம் கொண்டு வரப்படும் என்று அம்மாநில அமைச்சர் தெரிவித்தார். திருமண விஷயத்தில் புதிய சர்ச்சையை கிளப்பி உள்ள ‘லவ் ஜிகாத்’ விவகாரம் தொடர்பாக, பாஜக ஆளும் உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், அரியானா போன்ற மாநிலங்கள் புதிய சட்டங்களை இயற்றி வருகின்றன.

அதன் தொடர்ச்சியாக ஆண்கள் தங்களது வாழ்க்கை துணையாக பெண்ணை திருமணம் செய்வதற்கு முன்னர் தங்களது மதம், வேலை மற்றும் வருமானம் போன்றவற்றை தெரிவிக்க வேண்டும் என்று அசாம் பாஜக மாநில அமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், ‘திருமண விவகாரத்தில் சரியான புரிதல் இல்லாததால் பல பெண்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகி விடுகிறது.

அதனால், ஆண்கள் தங்களது வாழ்க்கை துணையாக பெண்ணை தேர்வு செய்து திருமணம் செய்வதற்கு முன்னர்  தங்களது மதம், வேலை மற்றும் வருமானம் போன்றவற்றை கட்டாயம் தெரிவிக்க வேண்டும். இதுதொடர்பாக மாநில அரசு புதிய சட்டத்தை கொண்டு வருவதற்கான பணிகளை தொடங்கியுள்ளது. இந்த புதிய மசோதா, அனைத்து மத திருமணங்களுக்கும் கட்டாயமாக்கப்படும். மேலும், இது பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும். கணவன் - மனைவிக்கும் இடையில் வெளிப்படைத்தன்மை முக்கியம்.

அவ்வாறு இல்லாவிட்டால் ஒருவர் மற்றொருவரை திருமணம் செய்து கொள்ளக்கூடாது. இதில், மதம் போன்ற விபரங்களும் முக்கியமானது. மாநில அரசின் சட்ட முன்மொழிவு ‘லவ் ஜிஹாத்’ பற்றியது அல்ல. ஆனால் இது அனைத்து மதங்களுக்கும் கட்டாய சட்டமாக இருக்கும். மத்திய பிரதேசம் மற்றும் உத்தரபிரதேசத்தில் சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட அல்லது முன்மொழியப்பட்ட சட்டங்களை போன்று இருக்காது’ என்றார்.


Tags : Law - Jihad ,Assam , Like the anti-love-jihad law, marriage can only take place if the religion, income and occupation are stated? ... New law is coming in Assam
× RELATED திருமணத்திற்காக மதம் மாறுவதை...