தமிழகத்தில் மணல் விலை உயர்வு ஏன்?... பரபரப்பு தகவல்கள்

நாமக்கல்: அரசு குவாரிகளில் முறைகேடுகள் தொடர்ந்து நடந்து வருவதால், தமிழகத்தில் மணல் விலை உயர்ந்துள்ளது என மாநில தலைவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் செல்ல.ராசாமணி நாமக்கல்லில் இன்று நிருபரிடம் கூறியதாவது: சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை நீதிபதி, அரசு நிர்ணயித்த விலைக்கு மணல் கிடைப்பதில்லை. ஒரு யூனிட் மணல் தங்கத்தின் விலைக்கு சமமாக ₹45 ஆயிரத்துக்கு விற்கப்படுகிறது என வேதனை தெரிவித்துள்ளார். கடந்த 3 ஆண்டுக்கு முன்பு விற்றதை விட கூடுதல் விலைக்கு மணல் விற்பனை செய்யப்படுகிறது.

தற்போது 1 யூனிட் மணல் ரூ10,000 முதல் ரூ12,000 வரை விற்கப்படுகிறது. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகம் முழுவதும் 50க்கும் மேற்பட்ட அரசு மணல் குவாரிகள் இயங்கியது. தற்போது, தமிழகத்தில் வேலூர் மாவட்டம் வடுகன்தாங்கல், தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி ஆகிய இரு அரசு மணல் விற்பனை நிலையம் மட்டுமே செயல்பட்டு வருகிறது. இதில், தினசரி 1 யூனிட் மணல் ரூ1,995 என விற்பனை செய்கின்றனர். அரசு மணல் குவாரிகளில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் சில இடங்களில் லாரிகளுக்கு முறைகேடாக அரசு ஒப்பந்த வேலைக்கு என இணையதளத்தில் பதிவு செய்து பணம் பெற்றுக்கொண்டு மணல் வழங்குவதால் வேறுவழியில்லாமல் அதிக விலைக்கு மணலை விற்பனை செய்ய வேண்டியநிலை உள்ளது.

இதுபோன்ற முறைகேடுகளை தடுக்க வேண்டும் என மணல் குவாரிகள் திட்ட இயக்குனர் அருண் தம்புராஜிடம் பல முறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, அரசு மணல் குவாரிகளில் முறைகேடுகள் தடுத்து, உடனடியாக தமிழகம் முழுவதும் அதிக குவாரிகளை திறக்க வேண்டும். அரசு வேலை, பொது வேலைக்கு என்று தனி இணையதளபதிவு இல்லாமல் ஒரே இணையதளம் மூலம் அனைத்து லாரிகளுக்கும் பாகுபாடின்றி மணல் வழங்க வேண்டும். அரசே லாரிகளுக்கு உரிய கிலோ மீட்டர் வாடகை நிர்ணயித்தால், அந்த வாடகைக்கு மணல் லாரிகளை இயக்க தயாராக இருக்கிறோம். இவ்வாறு செல்ல.ராசாமணி கூறினார்.

Related Stories:

>