தேர்தல் நடக்கும் இடத்தில் முதல்வரின் ஆய்வுக் கூட்டமா?... தேர்தல் ஆணையத்தில் திமுக புகார்

சென்னை: சிவகங்கை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தேர்தல் நடக்கும் அதே நாளில், தமிழக முதல்வர் ஆய்வுக் கூட்டம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் தேர்தல் அமைதியாக நடக்க வாய்ப்பில்லை. எனவே ஆய்வுக் கூட்டத்தை வேறு தேதிக்கு தள்ளி வைக்க மாநில தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக சார்பில் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மனு கொடுத்துள்ளார். திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மற்றும் திமுக தலைமைக் கழக வழக்கறிஞர் நீலகண்டன் ஆகியோர் மாநில தேர்தல் ஆணையரை சந்தித்து இன்று சந்தித்தனர். அப்போது சிவகங்கை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தேர்தல் குறித்து மனு கொடுத்தனர்.

அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:  கடந்த ஜனவரி மாதம் சிவகங்கை மாவட்டத்தில் மாவட்ட பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் தேர்தல் நடந்ததற்கு பிறகு இதுவரையில் சிவகங்கை மாவட்ட பஞ்சாயத்து தலைவரை தேர்வு செய்வதற்கான மறைமுக தேர்தல் நடக்கவில்லை. இந்த தேர்தலில் திமுக சார்பில் நிறுத்தப்படும் நபரே தேர்வு பெறுவார் என்று தெரியவந்துள்ளது. இருப்பினும் அதற்காக உறுப்பினர்களின் போதிய எண்ணிக்கை இல்லை என்று கூறி ஒத்தி வைக்கப்பட்டு வருகிறது. இதே காரணத்தை காட்டி 3 முறை இந்த தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.  ஆளும் கட்சியின் செல்வாக்கால் தமிழ்நாடு பஞ்சாயத்து தேர்தல் விதிகளின்படி இந்த தேர்தல் நடக்கவில்லை. இந்த தேர்தலில் ஆளும் கட்சியினர் வெற்றி பெற முடியாது.

இந்நிலையில் 4ம் தேதி காலை 10 மணி அளவில் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட பஞ்சாயத்து தலைவருக்கான தேர்தலும், மதியம் 3 மணி அளவில் துணைத் தலைவருக்கான தேர்தலும் நடக்கும் என்றும் மாவட்ட ஆட்சியர் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடக்கும் அதே நாளில், தமிழக முதல்வர் அந்த மாவட்டத்தில் ஆய்வுக் கூட்டம் நடத்த உள்ளதாகவும் அறிவித்துள்ளார். டிசம்பர் 4ம் தேதி தேர்தல் நடக்கும் என்று முன்பே திட்டமிட்டு அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது வேண்டுமென்றே அதே நாளில் சிவகங்கை மாவட்டத்தில் ஆய்வுக்கூட்டம் நடத்தப் போவதாக ஆளும் அதிமுகவினர் தெரிவித்துள்ளனர்.

இதன் மூலம் மேற்கண்ட தேர்தலில் முறைகேடுகள் நடக்க வாய்ப்புள்ளது. திமுக உறுப்பினர்கள் வாக்களிக்க முடியாத வகையில் சட்ட விரோத சம்பவங்கள் நடந்துள்ளன. உறுப்பினர்கள் கடத்தி செல்லப்படும் நிலையும் இருந்தது. எனவே இந்த தேர்தல் முடிந்த பிறகு அந்த ஆய்வுக் கூட்டத்தை நடத்திக் கொள்ளும் வகையில் ஆய்வுக் கூட்டத்தை ஒத்தி வைக்க வேண்டும். மேலும் எங்கள் கட்சிக்காரர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்.

Related Stories:

>