அறக்கட்டளையை நிர்வகிப்பது தொடர்பாக குடும்ப சண்டை; சமூக சேவகி சீதள் ஆம்தே விஷ ஊசி போட்டு தற்கொலை?... மகாராஷ்டிரா போலீசார் தீவிர விசாரணை

நாக்பூர்: மகாராஷ்டிர மாநிலம் சந்திரபூரில் உள்ள ஆனந்தவன ஆசிரமத்தில் மகசேசே விருது பெற்ற பாபா ஆம்தேவின் பேத்தியும், புகழ்பெற்ற சமூக ஆர்வலருமான டாக்டர் சீதள் ஆம்தே கராஜ்கி (39), மாற்றுத்திறனாளிகளுக்கான நிபுணர், சுற்றுச்சூழல் ஆர்வலர், ஓவியர், புகைப்படக் கலைஞர் மற்றும் சமூக தொழில் முனைவோர் என்று பலதளங்களில் பிரபலமாக செயல்பட்டு வந்தவர். பாபா ஆம்தேவால் உருவாக்கப்பட்ட மகாரோகி சேவா சமிதியின்  தலைமைச் செயல் அலுவலராகவும் இருந்தார். இந்நிலையில், இவர் நேற்று தற்கொலை செய்து கொண்டதாகத் தெரியவந்தது. இதுகுறித்து போலீஸார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், அவர் தனக்குத் தானே விஷ ஊசி செலுத்தி தற்கொலை செய்துகொண்டதாக தெரியவந்தது.

இவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார், அதுவும் விஷ ஊசி போட்டு ஏன் தற்கொலை செய்து கொண்டார்? என்பது குறித்து தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தற்கொலை செய்து கொள்ளும் சில நிமிடங்களுக்கு முன், சீதள் ஆம்தே தனது சமூக வலைதளத்தில் ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இந்தப் புகைப்படத்துக்கு ‘போரும் அமைதியும்’ என்று அவர் பெயரிட்டுள்ளார். இதுகுறித்து வரோரா காவல் நிலைய இன்ஸ்பெக்டர் தீபக் கோப்ராகடே கூறுகையில், ‘சமூக சேவகி சீதள் ஆம்தே - கராஜ்கியின் உடல்நிலை மோசமாக இருந்ததால், வரோராவில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரை சோதித்த மருத்துவர்கள் அவரது உடலில் விஷ ஊசி போடப்பட்டுள்ளதால், அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

நாக்பூர் தடயவியல் நிபுணர்கள் ஆனந்தவனில் உள்ள அறைக்கு சீல் வைத்துள்ளனர். இது, தற்கொலை வழக்கு என்று கூற முடியாது. பிரேத பரிசோதனை அறிக்கை வந்தபின் முடிவு எடுக்கப்படும். கடந்த வாரம், சீதள் ஆம்தேவின் குடும்ப உறுப்பினர்களிடையே மோதல் ஏற்பட்டுள்ளது.  பாபா ஆம்தேவால் நிறுவப்பட்ட மகாரோகி சேவா சமிதியை நிர்வகிப்பது தொடர்பாக, மறைந்த சமூக ஆர்வலரின் மகன்களான விகாஸ் மற்றும் பிரகாஷ் மற்றும் அவர்களது மனைவிகள் பாரதி மற்றும் மண்டகினி ஆகியோர் நவ. 22ம் தேதி சமூக ஊடகங்களில் சீதள் ஆம்தேவுக்கு எதிராக பல குற்றச்சாட்டுகளை முன்வைத்து கருத்துகளை பதிவிட்டுள்ளனர். ஆனந்தவன் மற்றும் சோம் நாத்தில் சுமார் 2,500 மாற்றுத்திறனாளிகளுக்கு மறுவாழ்வு அளித்து வருகிறது. தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது’ என்றார்.

Related Stories: