×

2021 சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கு மிகப்பெரிய வெற்றி: உதயநிதி ஸ்டாலின் உறுதி

திருவாரூர்: திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், ‘விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்’ நிகழ்ச்சிக்காக திருவாரூர் மாவட்டத்தில் நேற்று சுற்றுப்பயணம் மேற்கொண்டார். மேலத்திருப்பாலக்குடியில் தொழில்முனைவோரை சந்தித்து பேசினார். இரவு வலங்கைமானில் உள்ள திருமண மண்டபத்தில் விவசாயிகள் சந்திப்பு கூட்டம் திருவாரூர் மாவட்ட செயலாளர் கலைவாணன் எம்எல்ஏ தலைமையில் நடந்தது. இதில் கலந்துகொண்ட உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: வரும் 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலையொட்டி கடந்த 20ம் தேதி முதல் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றேன். அதிக அளவில் மக்கள் கூடுவதை பார்த்து பயந்து போன அதிமுக அரசு என்னை கைது செய்தது.

அதன் மூலம் எனக்கு இலவச விளம்பரத்தை தேடித்தந்தது. 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை வழங்க வேண்டும் என்ற எண்ணம் விவசாயிகள் ஆகிய உங்களுக்கும், மக்களுக்கும் வந்துவிட்டது. விவசாயிகள், மீனவர்கள், நெசவாளர்கள் என அனைத்து தரப்பினரையும் சந்தித்து வருகின்றேன். 10 ஆண்டு அதிமுக ஆட்சியில் எப்படி பாதிப்பினை சந்தித்து உள்ளார்கள் என்பதை வரும் வழியில் அவர்கள் என்னிடம் கூறினர். அதிமுக அரசு, பாஜகவின் மிரட்டலால் அடிபணிந்து வேளாண்மை சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளது. உணவு பாதுகாப்பு சட்டத்திற்கு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அனுமதி அளிக்காத நிலையில் அடிமை ஆட்சி தற்போது உணவு பாதுகாப்பு சட்டத்திற்கு அனுமதி அளித்துள்ளது.

பிரதமரின் விவசாயிகள் உதவித்தொகை திட்டத்தில் அமைச்சர்களின் பினாமிகள் பெயரில் பல கோடி மோசடி நடந்துள்ளது. உணவுத்துறை அமைச்சரின் ஊழல் ஊரறிந்த ரகசியமாக இருக்கிறது. கூட்டுறவு கடன் சங்கங்களில் அமைச்சர்களின் பினாமிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இலவச மின்சாரம், உழவர் சந்தைகள், விவசாய கடன் தள்ளுபடி அனைத்தும் முந்தைய திமுக அரசின் சாதனையாகும் என்றார். இதையடுத்து இரவு திருவாரூர் சன்னதி ெதருவில் உள்ள இல்லத்தில் உதயநிதி ஸ்டாலின் தங்கினார். தொடர்ந்து இன்று காலை 10 மணி அளவில் திருவாரூர் வ.சோ. பள்ளியில் பொதுமக்கள், விவசாயிகள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றார். பின்னர் சென்னை புறப்பட்டு சென்றார்.

Tags : DMK ,victory ,assembly elections ,Udayanithi Stalin , DMK's biggest victory in 2021 assembly elections: Udayanidhi Stalin's commitment
× RELATED தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணிக்கே அமோக வெற்றி: முத்தரசன் பேட்டி