புயல் சேதங்களை தடுக்க 12 இடங்களில் தற்காலிக முகாம்கள்; குமரியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்: மீட்பு பணிக்கு தயாரான அதிகாரிகள்

நாகர்கோவில்: வங்ககடலில் நிலை கொண்டு உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று புயலாக மாறி நாளை இலங்கையை கடந்து குமரி கடலில் நிலை கொள்ளும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இதன் காரணமாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கன மழை முதல் மிக கன மழை பெய்ய கூடும் என்றும், காற்றும் வேகமாக வீசும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது. இதற்கு புரேவி புயல் என்று பெயரிடப்பட்டுள்ளது. குமரி மாவட்டத்தை பொறுத்தவரை இந்த புயலால் பாதிப்பு ஏற்பட கூடாது என்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கும் பணியில் அனைத்து துறையை சேர்ந்த அதிகாரிகளும் உஷார் படுத்தப்பட்டு உள்ளனர்.

அதன்படி நாகர்கோவில் மாநகராட்சி பணியாளர்கள் தயார் நிலையில் இருக்க ஆணையர் ஆஷா அஜித் உத்தரவிட்டு உள்ளார். மாநகர நல அலுவலர் டாக்டர் கிங்சால் மேற்பார்வையில் சுகாதாரம், துப்புரவு, மீட்பு பணியாளர்கள் உஷார் படுத்தப்பட்டு உள்ளனர். நாகர்கோவில் மாநகர பகுதியில் பறக்கிங்கால், ஊட்டுவாழ்மடம், பாறைக்கமட தெரு உள்ளிட்ட 12 இடங்கள் தாழ்வான பகுதிகள் ஆகும். இங்கு மழை காலங்களில் அதிகளவில் வெள்ளம் பெருக்கெடுக்கும். இந்த இடங்களில் உள்ள மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைப்பதற்கு தேவையான முன்னெச்சரிக்கை பணிகள் நடக்கின்றன. அந்தந்த பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளை தூய்மைப்படுத்தும் பணிகளில் மாநகர பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

தண்ணீரை வெளியேற்ற தேவையான மின் மோட்டார்கள், மர அரவை இயந்திரம், ஜேசிபி இயந்திரங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருக்கின்றன. தேவைப்பட்டால் தனியார்களிடம் இருந்தும், மின் மோட்டார்கள் வாங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். தீயணைப்புத்துறை குமரி மாவட்ட தீயணைப்பு அலுவலர் சரவண பாபு நாகர்கோவிலில் இன்று நிருபரிடம் கூறியதாவது: குமரி மாவட்டத்தில் புயலை எதிர்கொள்ளும் வகையில் தீயணைப்பு துறையினர் மீட்பு பணிகளில் ஈடுபட தயார் நிலையில் உள்ளனர். மாவட்டத்தில் மொத்தம் 7 தீயணைப்பு நிலையங்கள் உள்ளன. ஒவ்வொரு தீயணைப்பு நிலையத்திற்கும் 2 குழுக்கள் வீதம் 16 குழுக்கள் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் தயார் நிலையில் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

குமரி மாவட்டத்தில் உள்ள 134 தீயணைப்பு வீரர்கள் தவிர மதுரை, தேனி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இருந்து 40க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் வரவுள்ளனர் .  கடந்த ஓகியின் போது அதிக வெள்ள பாதிப்பு ஏற்பட்ட சுசீந்திரம் , எஸ்.டி. மங்காடு, ஏழுதேசம், பூதப்பாண்டி ஆகிய பகுதிகளில் தீயணைப்பு வீரர்கள் கண்காணிப்பில் ஈடுபட உள்ளனர். மாவட்டத்தில் சிறப்பு நீச்சல் பயிற்சி பெற்ற 20 வீரர்கள் உள்ளனர். இவர்கள் தயார் நிலையில் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். குமரி மாவட்ட தீயணைப்பு துறையை பொறுத்தவரை மீட்புப் பணிகளை மேற்கொள்வதற்கு தேவையான அனைத்து உபகரணங்களும் போதுமான அளவு உள்ளன.

மரங்களை அறுப்பதற்கு தேவையான இயந்திரங்கள் , கயிறு, ரப்பர் படகுகள் உள்ளிட்ட உபகரணங்களும் உள்ளன. பொதுமக்கள் வெள்ள பாதிப்பு மற்றும் மீட்பு பணிகளுக்கு மாவட்ட கட்டுப்பாட்டு அறை எண் 10 77 அல்லது 101 என்ற நம்பரை உடனடியாக தொடர்பு கொள்ளலாம் என்றார். பேட்டியின் போது உதவி தீயணைப்பு அலுவலர் கார்த்திகேயன், நாகர்கோவில் நிலைய அலுவலர் துரை ஆகியோர் உடனிருந்தனர்.

தென்னைகளை காக்க...

குமரி  மாவட்ட வேளாண் இணை இயக்குநர் சத்தியஜோஸ் ெவளியிட்டுள்ள அறிவிப்பு: குமரி  மாவட்டத்தில் 2, 3, 4 ஆகிய தேதிகளில் கனமழை, சூறாவளி காற்று வீசும் என்று  வானிலை மையம் ெதரிவித்துள்ளது. எனவே நல்ல காய்ப்பு உள்ள தென்னந்தோப்புகளில்  முதிர்ச்சி அடைந்த அல்லது முதிர்ச்சி அடையும் தருவாயில் உள்ள இளநீர்  காய்களை பலத்த காற்று வீசுவதற்குள் அறுவடை செய்ய ேவண்டும். இதேபோல்  அடிப்பகுதி ஓலைகளை வெட்டி அகற்ற வேண்டும். மரங்களின் அடிப்பகுதியில்  மண்போட்டு அணைக்க வேண்டும். நீர்ப்பாய்ச்சுவதையும், உரம் இடுவதையும்  தற்காலிகமாக நிறுத்த ேவண்டும். இது தவிர தென்னை மரங்களை காப்பீடு செய்து  கொள்ள வேண்டும். இதற்கு வட்டார வேளாண் உதவி இயக்குநர் அலுவலகத்தில்  விண்ணப்பிக்கலாம். இதே போல நெல் பயிரிலும் ஏக்கருக்கு ₹467 செலுத்தி காப்பீடு செய்து கொள்ளலாம்.

திரும்பிய விசைப்படகுகள்

தூத்தூர் மண்டலத்தில் 850 விசைப்படகுகளும், சுமார் இரண்டாயிரத்திற்கு அதிகமான பைபர் படகுகளும் மீன்பிடித்து வருகின்றன. நாளை புரேவி புயல் உருவாகி கரையை நோக்கி வரும் போது குமரி மற்றும் கேரள எல்கை பகுதியில் உள்ள அரபிக்கடலில் அலையின் சீற்றம் அதிகமாக இருக்கும் என்பதால் குமரி  மாவட்ட நிர்வாகம் நேற்று முதல் கடலில் மீன்பிடிக்க செல்ல கூடாது என்றும், 2ம் தேதி மாலைக்குள் அனைத்து வகை மீன்பிடி படகுகளும் கரைக்கு வர வேண்டும் என அறிவித்தது. இதனால் தூத்தூர் மண்டலத்தில் காலையில் சென்று மாலையில் திரும்பும் பைபர் படகுகள், ஒரு வாரம் கடலில் தங்கி மீன்பிடித்து விட்டு வரும் விசைப்படகுகள் உட்பட எவ்வித வகை மீன்பிடி படகுகளும் மீன்பிடிக்க செல்லவில்லை.

அதேவேளையில் புயல் குறித்த தகவல் கிடைத்து ஆழ்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த விசைப்படகுகள் தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தை நோக்கி கரைக்கு வந்த வண்ணம் உள்ளன. கரைக்கு வந்த விசைப்படகுகள் தாமிரபரணி ஆற்று பகுதியிலும்,  பைபர் படகுகள் ஏவிஎம் கால்வாயிலும் புயல் தாக்காதவாறு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

கன்னியாகுமரியில் கடல் சீற்றம்

புயல் எச்சரிக்கை காரணமாக குமரி கடற்கரை கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாமல் தங்கள் படகுகளை கடற்கரையில் நிறுத்தி வைத்துள்ளனர். சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தை தங்குதளமாக கொண்டு தொழில் செய்து வரும் 350க்கும் மேற்பட்ட விசைபடகுகள் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ஆரோக்கியபுரம், சின்னமுட்டம், வாவதுறை, கோவளம், மணிக்குடி உள்ளிட்ட மீனவ கிராமங்களை சேர்ந்த 1000க்கும் மேற்பட்ட நாட்டு படகுகள் கடற்கரையில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இன்று காலை கன்னியாகுமரி கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. கடலில் ராட்சத அலைகள் எழும்பின. மீனவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தொழிலுக்கு செல்லாமல் படகுகளை நிறுத்தி வைத்துள்ள நிலையில் சுற்றுலா பயணிகளும் எச்சரிக்கப்பட்டு வருகின்றனர்.

மீனவ பிரதிநிதிகளுடன் கலெக்டர் ஆலோசனை

குமரி மாவட்டத்துக்கு புயல் எச்சரிக்கையை தொடர்ந்து, ஆழ்கடலுக்கு சென்றுள்ள மீனவர்கள் கரை திரும்ப உத்தரவிடப்பட்டு உள்ளது. மாவட்டத்தில் 100க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரை திரும்ப வேண்டிய நிலையில் அவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய சூழல் குறித்து மீனவ அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் கலெக்டர் அரவிந்த் இன்று ஆலோசனை நடத்தினார். மீன்துறை இணை இயக்குநர் காசிநாத், உதவி இயக்குநர் அஜித் ஸ்டாலின், தமிழக என்போஸ்மென்ட் எஸ்பி மகேஷ்வரன், மீனவ பிரதிநிதிகள் சர்ச்சில், ஜஸ்டின் ஆன்டணி, டிக்சன், சேசடிமை, ரோமான்ஸ், காட்சன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆழ்கடலுக்கு சென்றுள்ள மீனவர்கள் கரை திரும்ப 27ம் தேதி முதல் அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஆனால் இதுவரை மீனவர்கள் கரை திரும்பாத நிலை உள்ளது. அவர்கள் மீது குற்ற வழக்கு பதிவு செய்யப்படும் என்று என்போஸ்மென்ட் எஸ்பி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு மீனவ பிரதிநிதிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். குமரி மாவட்டத்தில் 765க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றன. இவர்களிடம் 90 ேசட்டிலைட் போன்கள் மட்டுமே உள்ளன. எனவே மீனவர்களுக்கு முறையாக தகவல்கள் சென்றடையவில்லை. குமரி மீனவர்கள் லட்சத்தீவு,

கர்நாடகா, குஜராத் உள்ளிட்ட ஆழ்கடல் பகுதிகளில்  300 முதல் 400 நாட்டிக்கல் ைமல் தொலைவில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர் என தெரிவித்தனர். கரை திரும்பாத விசைப்படகுகளின் எண்ணிக்கை 150 ஆக இருந்தது. தற்போது 100 விசைப்படகுகள் கரை திரும்ப ேவண்டிய நிலை உள்ளது. இந்த விசைப்படகுகளுக்கு கப்பல் படை மூலமாக தகவல் ெதரிவிக்கப்பட்டு, மீனவர்களை கரை திரும்ப செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கலெக்டர் தெரிவித்தார்.

கண்காணிப்பு அதிகாரி வருகை

குமரி மாவட்டத்துக்கு கண்காணிப்பு அதிகாரியாக ஜோதி நிர்மலா நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது புயல் எச்சரிக்கை, மழை வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ள நிலையில் அவர் இன்று குமரி மாவட்டம் வருகை தந்தார். பின்னர் மாவட்ட கலெக்டர் அரவிந்த் மற்றும் அதிகாரிகளுடன் கலெக்டர் அலுவலகத்தில் ஆலோசனை மேற்கொண்டார். தொடர்ந்து அவர் மழை, புயல் ெதாடர்பாக மாவட்டத்தில் செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகளை பார்வையிட உள்ளார்.

Related Stories:

>