சிப்காட் நவசபரி ஐயப்பன் கோயிலில் கார்த்திகை தீபத்தையொட்டி பதினெட்டாம் படி பூஜை: திரளான பக்தர்கள் பங்கேற்பு

ராணிப்பேட்டை: கார்த்திகை தீபத்தையொட்டி நேற்று முன்தினம் காலை 5.30 மணியளவில் நடை திறக்கப்பட்டு கணபதி ஹோமம், தொடர்ந்து ஸ்ரீ நவசபரி ஐயப்பனுக்கு அபிஷேகம், உஷ பூஜை, நெய் அபிஷேகம், மகா தீபாராதனை நடைபெற்றது. பகல் 12 மணியளவில் நடை சாத்தப்பட்டு மீண்டும் மாலை 5மணிக்கு திறக்கப்பட்டு  கோயில் குருசாமி ஜெயச்சந்திரன் தலைமையில் பதினெட்டாம் படி பூஜை மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. பவுர்ணமியையொட்டி பகவதி சேவாவும், ஸ்ரீசபரி சாஸ்தா சமிதி குழுவினரின் சிறப்பு பஜனை நடைபெற்றது. இதில் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர். ஸ்ரீநவசபரி ஐயப்பன் கோயில் குருசாமியும், சபரிமலை ஐயப்ப சேவா சமாஜம் வடதமிழ்நாடு பொதுச் செயலாளருமான வி.ஜெயச்சந்திரன் கூறியதாவது: கொரோனா விதிமுறைகளை கடைபிடித்து பக்தர்கள் கோயிலுக்கு வரவேண்டும். கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ளதால் கேரள அரசு ஐயப்ப பக்தர்கள் வருவதற்கு தடைவிதித்துள்ளது. எனவே ஐயப்ப பக்தர்கள் வழக்கம்போல்  கார்த்திகை மாதம் முதல் தேதியன்று மாலை அணிந்துள்ள பக்தர்கள்  சிப்காட்டில் இருக்கும் 18ம் படி கொண்ட ஸ்ரீநவசபரி ஐயப்பன் கோயிலில் நெய் அபிஷேகம் செய்து வழிபாடு செய்வதற்கு அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் இருந்து ஐயப்ப பக்தர்கள் சிப்காட் ஸ்ரீ நவசபரி ஐயப்பன் கோயிலுக்கு வருகை புரிந்து தினசரி 100க்கும் மேற்பட்டோர்  நாள்தோறும் 18ம் படி ஏரி இருமுடி கட்டி செலுத்துகின்றனர். இக்கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு மூலிகை குடிநீர், சிறப்பு அன்னதானம் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அனைவரும் முக கவசம் அணிந்து சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும் என்றார்.

Related Stories: