டீ விற்ற திருமங்கலம் மாணவருக்கு திமுக உதவி

திருமங்கலம்: கொரோனாவால் தந்தையின் தொழில் பாதிக்கப்பட்டு வேலையில்லாத நிலை ஏற்பட்டதால் குடும்ப சூழ்நிலைக்காக சைக்கிளில் டீ விற்ற திருமங்கலம் சிறுவனுக்கு திமுக சார்பில் உதவி வழங்கப்பட்டது. மதுரை மாவட்டம் திருமங்கலம் காட்டுமாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். தங்கநகை பட்டறையில் கூலி வேலை செய்து வருகிறார். இவரது மகன் ராகுல் (13). திருமங்கலம் பிகேஎன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறார். கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த 8ம் மாதத்திற்கு மேலாக பாலகிருஷ்ணனுக்கு வேலையில்லாத நிலை ஏற்பட்டது. இதனால் குடும்பத்தில் வறுமை ஏற்பட்டது.

மனவேதனையடைந்த மாணவன் ராகுல் தந்தையுடன் இணைந்து குடும்ப பாரத்தை சுமக்கமுடிவு செய்தார். தாயின் யோசனைபடி வீட்டில் டீ தயாரித்து அதனை சைக்கிளில் வைத்து நகரின் முக்கிய வீதிகளில் விற்பனை செய்ய துவங்கினார். இந்நிலையில், பள்ளியில் ஆன்லைன் வகுப்பு துவங்கியதால் காலை வேளையில் ராகுலால் டீ விற்பனை செய்ய முடியவில்லை. இதனால் மதியம் 1 மணி முதல் மாலை வரை தற்போது டீ விற்றுவருகிறார். அதேநேரம் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க அவரிடம் செல்போன் கூட இல்லை. நண்பர்களுடன் சேர்ந்து படித்து வந்தார். இதனை தொடர்ந்து திமுக சார்பில் மாணவனுக்கு உதவ முடிவு செய்யப்பட்டது.

மாநில தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் எம்எல்ஏ மற்றும் மதுரை தெற்கு மாவட்ட திமுக செயலாளர் மணிமாறன் ஏற்பாட்டில் மாணவன் ராகுலுக்கு நேற்று புதிய செல்போன் வழங்கப்பட்டது. திருமங்கலத்திலுள்ள ராகுல் வீட்டிற்கு சென்ற திமுக தெற்குமாவட்ட செயலாளர் மணிமாறன், திருமங்கலம் நகர செயலாளர் முருகன், தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் பாசபிரபு, நகர நிர்வாகி செல்வம் ஆகியோர் மாணவன் ராகுலிடம் செல்போனை வழங்கினர். சிறுவன் ராகுல் மற்றும் அவனது குடும்பத்தினர் திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்தனர்.

Related Stories:

>