ஓய்வு பெற்ற கப்பற்படை அதிகாரி பறக்கும் விமானத்திலிருந்து 12 ஆயிரம் முறை குதித்து சாதனை

தேனி: பறக்கும் விமானத்தில், 12 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து 12 ஆயிரம் முறை பாராசூட்டில் இருந்து குதித்து, ஓய்வு கப்பற்படை அதிகாரி இந்திய சாதனை படைத்துள்ளார். தேனி மாவட்டம், பெரியகுளம் வடகரையைச் சேர்ந்தவர் ராஜ்குமார். 1995ல் இந்திய கப்பல் படையில் சேர்ந்தார். அங்கு அதிகாரியாக பணிபுரிந்தார். 2010ல் ஓய்வு பெற்றபின், இந்திய வான்வழி சாகச வீரர்களுக்கான பயிற்சியாளராக இருந்து வருகிறார். கடந்த மாதம் டெல்லி நார்னோல் விமானதளத்தில் நடந்த வான்வெளி சாகசத்தில் கலந்து கொண்டு, விமானத்தில் பறந்து சுமார் 12 ஆயிரம் அடி உயரத்திலிருந்து 12 ஆயிரமாவது முறை பாராசூட்டில் மூலம் குதித்து இந்திய சாதனை படைத்தார்.

இதுவரை இந்திய அளவில் யாரும் 12 ஆயிரம் முறை வானில் இருந்து பாராசூட் மூலம் குதித்ததில்லை. ராஜ்குமார் கூறுகையில், ‘‘கடந்தாண்டு நியூயார்க் யுனிவர்சிட்டி என்னை கவுரவப்படுத்தும் விதமாக டாக்டர் பட்டம் வழங்கியது. டெல்லி அருகே நார்னோல் விமான தளத்தில் வான்வெளி சாகச பயிற்சி அளித்து வருகிறேன். இதுவரை என்னிடம் 8,427 பேர் பயிற்சி பெற்றுள்ளனர். உலக சாதனையாளர்களை உருவாக்குவதே லட்சியம்’’ என்றார்.

Related Stories: