‘புரெவி’புயல் எச்சரிக்கை; குளச்சலில் கரை திரும்பிய விசைப்படகுகள்: கட்டுமரங்களும் மீன் பிடிக்க செல்லவில்லை

குளச்சல்: குமரி கடலில் ‘புரெவி’ புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதை அடுத்து  குளச்சல் கடல் பகுதியில் மீன் பிடிக்க சென்ற  விசைப்படகுகள் கரை திரும்பிவுள்ளன. கட்டுமரங்களும் மீன் பிடிக்க கடலுக்கு செல்லாததால் அவை மணற்பரப்பில் நிறுத்தப்பட்டுள்ளன. குளச்சல் கடல் பகுதியில் சுமார் 300 க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், 1000 க்கும் மேற்பட்ட பைபர் வள்ளங்களும்  மீன்பிடித்தொழில் செய்து வருகின்றன. ஒரு விசைப்படகு ஆழ்கடல் பகுதிவரை சென்று 10 நாட்கள் தங்கி மீன் பிடித்து வருவது வழக்கம். ஆழ்கடல் பகுதியில்தான் உயர் ரக மீன்களாகிய சுறா, இறால், கேரை, கணவாய், செம்மீன் எனப்படும் கிளி மீன்கள் கிடைக்கும்.

தற்போது குளச்சல் கடல் பகுதியில் கணவாய், நாக்கண்டம் போன்ற மீன்கள் கிடைத்து வரும் நிலையில் கிழக்கு வங்க கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று மாலை புயலாக வலுப்பெற்று இலங்கையை கடந்து குமரி கடல் பகுதியில் 2 நாள் நிலை கொள்ளும் என்று வானிலை அறிக்கை எச்சரித்து உள்ளது. இந்த புதிய புயலுக்கு ‘புரெவி’ என்று பெயரிடப்பட்டு உள்ளது. இதனால் குமரி மாவட்ட மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என்று மீன் துறை அறிவுறுத்தி உள்ளது. இதையடுத்து குளச்சல் கடல் பகுதியில் ஆழ்கடலுக்கு சென்ற விசைப்படகுகள் பாதியிலேயே கரை திரும்பி உள்ளது.

தற்போது அவை நங்கூரம் பாய்ச்சி மீன்பிடித்துறைமுகத்தில் நிறுத்தப்பட்டு உள்ளது. இதே போல் 1000 க்கும் மேற்பட்ட பைபர் வள்ளம், கட்டுமரங்களும் மீன்பிடிக்க செல்லாததால் அவைகளும் மணற்பரப்பில் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டு உள்ளது.

இதனால் குளச்சலில் இன்று மீன் வரத்து குறைந்து காணப்பட்டது. அதேவேளை கரை திரும்பிய விசைப்படகுகளில் வழக்கம்போல் மீன் விற்பனை நடந்தது. விசைப்படகு மீன்களை வியாபாரிகள் போட்டி போட்டு ஏலம் கேட்டு வாங்கி சென்றனர்.

அணைகளில் கூடுதல் தண்ணீர் வெளியேற்றம்

குமரி மாவட்டத்தில் புயல் சின்னம் காரணமாக அடுத்துவரும் நாட்களில் கனமழை பெய்யும் என்று வானிலை மையங்கள் கூறி வருகின்றன. இதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அரசு துறைகளால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக நிரம்பிய நிலையில் காணப்பட்ட அணைகளில் இருந்து கூடுதல் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகின்றன. அணைகளில் இருந்து வினாடிக்கு ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இன்று காலை நிலவரப்படி பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 43.98 அடியாகும். அணைக்கு 472 கன அடி தண்ணீர் வரத்து காணப்பட்டது. 526 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது.

பெருஞ்சாணி நீர்மட்டம் 69.90 அடியாகும். அணைக்கு 176 கன அடி தண்ணீர் வரத்து காணப்பட்டது. 350 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது. சிற்றார்-1ல் 14.04 அடியாக நீர்மட்டம் காணப்பட்டது. அணைக்கு 151 கன அடி தண்ணீர் வரத்து காணப்பட்டது. 200 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. பொய்கையில் 19.90 அடியாக நீர்மட்டம் உள்ளது. மாம்பழத்துறையாறில் 35.76 அடியாக நீர்மட்டம் காணப்படுகிறது. அணையில் இருந்த 20 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. முக்கடல் அணை நீர்மட்டம் 21.5 அடியாகும். அணையில் இருந்து 7.42 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

Related Stories:

>