ஸ்டெர்லைட் வழக்கு: வேதாந்தாவின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல்.!!!

டெல்லி: ஸ்டெர்லைட் ஆலையை மூடிய விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ள வேதாந்தா நிறுவனம் மனுவை தள்ளுபடி செய்யக்கோரி தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.  

ஸ்டெர்லைட் ஆலை:

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து வெளியாகும் நச்சு புகையால் பொதுமக்களுக்கு நோய்கள் பரவுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதை வலியுறுத்தி கடந்த 2018-ம் ஆண்டு மே 22-ந் தேதி பொதுமக்கள் நடத்திய  மிகப்பெரிய போராட்டம், வன்முறையாக மாறியது. இதில் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் பரிதாபமாக பலியாகினர். இதையடுத்து அதே ஆண்டு மே மாதம் 28-ந் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு தமிழக அரசு ‘சீல்’ வைத்தது.

சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு:

தமிழக அரசின் நடவடிக்கை்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்த்து ஸ்டெர்லைட் ஆலையை நடத்தி வரும் வேதாந்தா நிறுவனம், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் டி.எஸ். சிவஞானம்,  வி. பவானி சுப்பராயன் அடங்கிய அமர்வு, தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த ரிட் மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்து, தமிழக அரசு வெளியிட்ட அரசாணை செல்லும் எனக்கூறி  கடந்த ஆகஸ்ட் 18-ம் தேதி தீர்ப்பளித்தது.

வேதாந்தா நிறுவனம் மேல்முறையீடு:

அனைத்து சட்ட விதிகளுக்கும் உட்பட்டு தான் ஆலை நடத்தப்பட்டது. ஆனால் எந்தவித முன் அறிவிப்பும் இல்லாமல் மாநில அரசு ஆலையை பூட்டி சீல் வைத்தது. இதனால் உற்பத்தி என்பது அதிகளவு பாதித்துள்ளது. அதனால் இந்த  விவகாரத்தில் உயர்நீதிமன்றம் வழங்கிய உத்திரவிற்கு தடை விதித்து ஆலையை திறக்க அனுமதி வழங்க வேண்டும். சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கின் விசாரணையின் போது ஒரு சில விஷயங்களில் உயர்நீதிமன்றம் ஒரு  தலைபட்சமாக விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக வேதாந்தா நிறுவனம் கடந்த ஆகஸ்ட் 26-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தது.

கேவியட் மனு தாக்கல்:

இதைத்தொடர்ந்து, வேதாந்தா நிறுவனத்தின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தால், எங்களது தரப்பு வாதங்களையும் கேட்க வேண்டும் என தமிழக அரசு உட்பட ஆலை எதிர்பாளர்கள் அமைப்புகள் ஆகியோர்  தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்தனர்.

தமிழக அரசு கூடுதல் மனு தாக்கல்:

இந்நிலையில், உயர்நீதிமன்ற விசாரணையை விமர்சித்து வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளக்கூடாது. இதனை தள்ளுபடி செய்யக்கோரி தமிழக அரசு இன்று  உச்சநீதிமன்றத்தில் கூடுதல் மனு தாக்கல் செய்துள்ளது. இருப்பினும், தமிழக அரசின் மனுவை உச்சநீதிமன்றம் ஏற்குமா? இல்லை வேதாந்தா நிறுவனத்தின் மனுவை ஏற்று விசாரணை நடத்துமா? என்பது பொருத்து இருந்துதான் பார்க்க வேண்டும். 

Related Stories: