×

சிறை தண்டனை வழங்கப்பட்டது போல தலைவர்களின் சிலைகள் கூண்டுக்குள் வைப்பது அவமதிப்பது போல் உள்ளது : நீதிபதிகள் கருத்து!!

மதுரை : தலைவர்களின் சிலைகளை கூண்டுக்குள் வைப்பது ஏன் என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது. அங்கீகரிக்கப்படாத சிலைகளை அகற்றக் கோரி மதுரையைச் சேர்ந்த வைரசேகர் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொது நல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் தமிழகத்தில் அனுமதி பெற்ற சிலைகள் அருகே ஏணிகளை அகற்றவும் அனுமதி பெறாத சிலைகளை அப்புறப்படுத்த உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். இந்த மனு இன்று நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தலைவர்களின் சிலைகள் கூண்டுக்குள் வைப்பது அவர்களை அவமதிப்பது போல் உள்ளது என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

தொடர்ந்து பேசிய நீதிபதிகள், ஏதோ சிறை தண்டனை வழங்கப்பட்டது போல சிலைகள் கூண்டுக்குள் வைக்கப்பட்டுள்ளன.தலைவர்களின் சிலைகளை சுற்றி கூண்டு அமைப்பதற்கு பதில் சிலை வைக்கப்படாமலேயே இருக்கலாம். தலைவர்களுக்கு சிலை வைக்காமல் அவர்கள் நினைவை மனதில் வைத்து கொள்கையை பின்பற்றினாலே போதும். பல அரசியல்வாதிகள் தங்களின் ஆதாயத்திற்காகவே சிலைகளுக்கு மரியாதை செய்கின்றனர்.சிலை மரியாதை செய்யும் நிகழ்வின் போது, போக்குவரத்து நிறுத்தப்படுவதால் மக்கள் பெரிதும் அவதிக்கு உள்ளாகுகிறார்கள், என்று கருத்து தெரிவித்தனர். இதையடுத்து சிலைகள் தொடர்பான வழக்கில் தமிழக அரசு பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கை டிசம்பர் 14ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.  


Tags : leaders ,Judges , Imprisonment, statues, cage, judges, comment
× RELATED முத்துப்பேட்டை அருகே தோட்டத்தில் குழி தோண்டியபோது 7 சிலைகள் கண்டெடுப்பு