கடலுக்கு சென்றுள்ள தமிழக மீனவர்கள் பாதுகாப்பாக கரை ஒதுங்க அனுமதியுங்கள்; கர்நாடகா, கேரளா, கோவா மாநிலத்துக்கு தமிழக அரசு கடிதம்: அமைச்சர் உதயகுமார் தகவல்

சென்னை: கடலுக்கு மீன் பிடிக்க சென்றுள்ள தமிழக மீனவர்கள் பாதுகாப்பாக கரை ஒதுங்க  அனுமதிக்கும்படி கர்நாடகா, கேரளா, கோவா மாநிலத்துக்கு அரசு சார்பில் கடிதம்  எழுதப்பட்டுள்ளதாக அமைச்சர் உதயகுமார் கூறினார். இதுகுறித்து சென்னை, எழிலகத்தில் உள்ள மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில், வங்கக்கடலில் உருவாகியுள்ள புயல் தொடர்பாக வரும் நாட்களில் தமிழகத்தில் பெய்யும் மழை மற்றும் எடுக்கப்பட உள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இன்று ஆலோசனை நடத்தினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தென் கிழக்கு மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது, கன்னியாகுமரியில் இருந்து கிழக்கே 930 கி.மீ தொலைவில் நிலை கொண்டுள்ளது, இது அடுத்த 24 மணி நேரத்தில் வலுவடைந்து புயலாக மாறும். இதன்மூலம் வரும் நாட்களில் ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, தேனி, கன்னியாகுமரி, சிவகங்கை, விருதுநகர், திண்டுக்கல் மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து மாவட்ட கலெக்டர்களுடன் அவ்வப்போது பேசி, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து, தயார் நிலையில் இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது. புயல் குறித்த விவரங்கள் மீனவர்களுக்கு உடனுக்குடன் தகவல் தெரிவிக்கப்படுகிறது. நேற்றைய நிலவரப்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து 491 இயந்திர படகுகளும், 35 ஆழ்கடல் மீன்பிடி படகுகளும், கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து 172 ஆழ்கடல் மீன்பிடி படகுகளும் கடலில் மீன்பிடிக்க சென்றுள்ளன. தமிழக படகுகள் பாதுகாப்பாக கரை ஒதுங்க அனுமதிக்கும்படி கர்நாடகா, கேரளா, கோவா மாநிலங்கள் மற்றும் லட்சத்தீவு யூனியன் பிரதேச மீன்வள துறைகளுக்கு தமிழக அரசு கடிதம் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக படகுகள் பாதுகாப்பாக கரை ஒதுங்க உதவிடும் வகையில் அதிகாரிகள் குழுக்கள் அண்டை மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.  தமிழக ஆழ்கடல் மீன்பிடி படகுகள் மற்றும் அவர்கள் மீன்பிடிக்கக் கூடிய பகுதிகளின் புவியியல் குறியீடு ஆகிய விவரங்களை கப்பல்படை மற்றும் கடலோர காவல் படைக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென் மாவட்டங்களான, மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, இராமநாதபுரம், விருதுநகர், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் உள்ள 7605 ஏரிகளில், 979 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன.

நீர்நிலைகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. மழை தொடர்பாக அடிக்கடி தொடர்ந்து அறிவிப்புக்களை அரசு வெளியிட்டு வருகிறது. ஆனால் மழை தொடர்பாக சமூக வலைதளங்களில் வரும் செய்திகளை மக்கள் நம்ப வேண்டாம். இவ்வாறு கூறினார்.

Related Stories: