வேரிலிருந்து தெரிந்துகொள்ள விருப்பம்: கொரோனா எங்கிருந்து பரவியது என்பதைக் அறிய அனைத்து முயற்சியும் செய்வோம்...WHO தலைவர் பேட்டி.!!!

ஜெனிவா: கொரோனா எங்கிருந்து பரவியது என்பதைக் கண்டறிய எல்லா முயற்சியும் செய்வோம் என உலக சுகாதார நிறுவனத் தலைவர் டெட்ரோஸ் அதானோம் தெரிவித்துள்ளார். சீனாவின் வுஹான் மாகாணத்தில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது இந்தியா மட்டுமின்றி உலக நாடுகள் முழுவதும் பரவியது. கடந்த 8 மாதத்துக்கும் மேலாக கொரோனா நோய் தொற்று பொதுமக்களின் வாழ்க்கையை புரட்டி போட்டு வருகிறது. நாள்தோறும் உயிரிழப்புக்கள் ஏற்பட்டு வருகிறது. உலகளவில் இதுவரை 14 லட்சத்து 76 ஆயிரத்து 476 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். 6 கோடியை 36 லட்சத்து 95 ஆயிரத்து 914 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனாவால் அதிகம் பாதித்த நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில் ஆகிய நாடுகள் முன்னிலையில் உள்ளன. கொரோனா நோய்க்கு எதிராக சரியான தடுப்பு மருந்து இல்லாததால் நோய் தொற்றை முழுமையாக குணப்படுத்த முடியாமல் சர்வதேச நாடுகள் அவதிக்குள்ளாகி வருகின்றன. கொரோனா தடுப்பு மருந்தை தயாரிக்கும் பணியில் பல்வேறு நாடுகளும் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்தியாவில் 3 கொரோனா தடுப்பு மருந்துகள் தயாரிப்பு பணிகள் நடந்து வருகின்றது.

தங்கள் நிறுவனம் தயாரித்துள்ள கொரோனா தடுப்பு மருந்து 100% பலன் தருவதாக அமெரிக்க நிறுவனமான மாடர்னா நேற்று தெரிவித்துள்ளது. இருப்பினும், கொரோனா வைரஸ் எதன் மூலம் பரவத் தொடங்கியது, எப்படி பரவியது என்பது கண்டறியப்படாமல் இன்று வரை இருந்து வருகிறது. சீனாவில் இறைச்சி சந்தையிலிருந்து கொரோனா பரவியதாக வெளியாகிய தகவலை சீனா அரசு மறுத்து வருகிறது.

இந்நிலையில், கொரோனா தொடர்பாக பேசிய உலக சுகாதார நிறுவனத் தலைவர் டெட்ரோஸ் அதானோம், கொரோனா வைரஸ் எந்த விலங்கு மூலம் பரவத் தொடங்கியது என்பதைக் கண்டறிய அனைத்து முயற்சிகளையும் செய்வோம். வரும் தலைமுறைகளை தொற்றுநோயிலிருந்து பாதுகாக்க அந்த விவரத்தை தெரிந்துகொள்வது முக்கியம். இந்த மர்மத்தின் வேரிலிருந்து தெரிந்துகொள்ள உலக சுகாதார நிறுவனம் விரும்புகிறது. சீனா இந்த விவகாரத்தை அரசியலாக்கக் கூடாது. உலக சுகாதார நிறுவனத்தின் நிலைப்பாடு தெளிவானது. அந்த வைரஸின் தொடக்கத்தைக் கண்டறிய வேண்டும். அது எதிர்கால தலைமுறையை பாதுகாக்க உதவும்’ என்று தெரிவித்தார்.

Related Stories: