‘ஜோகோவிச்தான் சிறந்த வீரர்’ - பாட் காஷ் புகழாரம்

சிட்னி: ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், ஆடவர் ஒற்றையரில் 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார். தரவரிசையில் 310 வாரங்கள் நம்பர் 1 வீரராக இருந்துள்ளார். அதிலும் 237 வாரங்கள் தொடர்ச்சியாக நம்பர் 1 இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளார். ஸ்பெயினின் முன்னணி நட்சத்திரம் ரஃபேல் நடாலும் ஆடவர் ஒற்றையரில் 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார். இதில் 13 பிரெஞ்ச் ஓபன் பட்டங்கள். ஒற்றையர் தரவரிசையில் தற்போது 2ம் இடத்தில் உள்ள இவர், 209 வாரங்கள் முதலிடத்தில் இருந்துள்ளார்.

இவர்களுடன் ஒப்பிடுகையில் செர்பியாவின் நோவாக் ஜோகோவிச்தான் சிறந்த வீரர் என்று, ஆஸ்திரேலியாவின் முன்னாள் டென்னிஸ் வீரர் பாட் காஷ் கூறியுள்ளார். பாட் காஷ், கடந்த 1987ம் ஆண்டு விம்பிள்டனில் இவான் லெண்டிலை வீழ்த்தி, ஆடவர் ஒற்றையர் பட்டத்தை கைப்பற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.தற்போது ஏடிபி தரவரிசையில் நம்பர் 1 இடத்தில் உள்ள ஜோகோவிச், ஆடவர் ஒற்றையரில் இதுவரை 17 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார். 297 வாரங்கள் நம்பர் 1 இடத்தில் தொடர்கிறார்.

ஜோகோவிச் குறித்து பாட் காஷ் கூறுகையில், ‘‘ரோஜர் பெடரர், ரஃபேல் நடால் மற்றும் நோவாக் ஜோகோவிச் ஆகிய மூவருமே சிறந்த வீரர்கள்தான். அதில் மாற்றுக்கருத்து இல்லை. யாருடைய ஆட்டத்தை பார்க்க விரும்புகிறீர்கள் என்று கேட்டால், நான் முதலில் ரோஜர் பெடரின் ஆட்டத்தைத்தான் கூறுவேன். அவரது ஆட்டம் எனக்கு மிகவும் பிடிக்கும். ஆனால் 3 பேரில் யார் மிகச் சிறந்த வீரர் என்று கேட்டால், நான் ஜோகோவிச் பெயரைத்தான் கூறுவேன்.

அவரால் மற்ற இருவரையும் எந்த மைதானத்திலும் வீழ்த்த முடியும். நடால் களிமண் ஆடுகளங்களில் மட்டும் ஜொலிக்கிறார். பெடரரின் பிளேஸ்மென்ட்டுகள் அபாரமாக இருக்கும். ஆனால் பேஸ் லைனில் துல்லியமாக பிளேஸ்மென்ட் செய்வது ஜோகோவிச்தான்’’ என்று பாட் காஷ் புகழ்ந்துள்ளார்.

Related Stories: