ஐஎஸ்எல் கால்பந்து: மும்பை-ஈஸ்ட் பெங்கால் இன்று மோதல்

கோவா: நடப்பு ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் இன்று ஜிஎம்சி ஸ்டேடியத்தில் நடைபெறும் போட்டியில் மும்பை சிட்டி, ஈஸ்ட் பெங்கால் அணியை எதிர்கொள்கிறது. இத்தொடரில் இதுவரை 2 போட்டிகளில் ஆடியுள்ள மும்பை சிட்டி அணி, அதில் ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. ஒன்றில் தோல்வியடைந்துள்ளது. 3 புள்ளிகள் எடுத்துள்ளது. ஈஸ்ட் பெங்கால் அணி, இதுவரை ஒரு போட்டியில் ஆடியுள்ளது. அதில் தோல்வியடைந்து, தற்போது புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.

இன்றைய போட்டியில் மும்பையை வீழ்த்தி, வெற்றி கணக்கை துவக்க வேண்டும் என்ற துடிப்புடன் ஈஸ்ட் பெங்கால் அணி களமிறங்குகிறது. புள்ளி பட்டியலில் தற்போது 5ம் இடத்தில் உள்ள மும்பை அணி, ஈஸ்ட் பெங்காலை இன்று வீழ்த்தினால், முதலிடத்திற்கு முன்னேற முடியும். அதனால் மும்பை வீரர்களும், இன்று முழுத்திறனையும் வெளிப்படுத்தி ஆடுவார்கள் என எதிர்பார்க்கலாம். ஈஸ்ட் பெங்கால் அணியின் முன்கள வீரர்கள் பல்வந்த் சிங்கும், வினீத்தும்,

இடது ஓர வீரர் அந்தோணியும் இன்று தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால், மும்பை அணிக்கு சிக்கல்தான். ‘‘இத்தொடருக்காக 2 வாரம் மட்டுமே பயிற்சி எடுத்துக் கொண்டோம். அதனால்தான் முதல் போட்டியில் மோகன் பெகான் அணியிடம் தோல்வியடைந்தோம். ஆனால் இன்றைய போட்டியில், தேவையான வியூகங்களோடு மும்பையை எதிர்கொள்கிறோம். மும்பை அணியை கடந்த காலங்களில் வீழ்த்தியிருக்கிறோம் என்பதை மறக்க வேண்டாம்’’ என்று ஈஸ்ட் பெங்கால் பயிற்சியாளர் ஃபௌலர் கூறியுள்ளார்.

மும்பை அணியின் தாக்குதலை முன்கள வீரர்களான ஆடம் பாண்டரும், ஹூகோ பவுமசும் முன்னெடுத்து செல்ல உள்ளனர். முந்தைய 2 போட்டிகளிலும் இருவரும் திறமையாக ஆடியுள்ளனர்.

கோவா-வடகிழக்கு யூனியன் டிரா

படோர்டா ஸ்டேடியத்தில் நேற்று கோவா-வடகிழக்கு யூனியன் அணிகளுக்கு இடையே நடந்த போட்டியில் இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்தன. முதல் பாதியில் கிடைத்த கார்னர் வாய்ப்புகளை இரு அணி வீரர்களுமே வீணடித்தனர். ஆட்டத்தின் 40 நிமிடத்தில் கிடைத்த பெனால்டியில் வடகிழக்கு யூனியனின் முன்கள வீரர் இட்ரிசா சில்லா, கோல் அடித்தார். அடுத்த 3வது நிமிடத்தில் கோவாவின் முன்கள வீரர் இகோர் அருமையாக ஒரு ஃபீல்டு கோல் அடித்தார். ஆட்டத்தின் 2ம் பாதியில் இரு அணி வீரர்களுமே கோல் அடிக்கவில்லை.

Related Stories: