மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ள பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ள போவதில்லை: அனைத்திந்திய விவசாயிகள் சங்கம் அறிவிப்பு

டெல்லி: மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ள பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ள போவதில்லை என அனைத்திந்திய விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது. மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வலியுறுத்தி அரியானா, பஞ்சாப், கேரளா மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட ஆறு மாநில விவசாயிகள் ‘டெல்லி சலோ’ (டெல்லி நோக்கி பேரணி) என்ற போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் டெல்லியின் எல்லைகளில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளனர். இந்த போராட்டம் இன்று 6வது நாளாக நீடிக்கிறது. போராட்டத்தில் வன்முறை ஏற்படாமல் தடுக்க துணை ராணுவம் மற்றும் போலீசார் எல்லை பகுதிகளில் குவிக்கப்பட்டு உள்ளனர்.

விவசாயிகள் போராட்டம் நடத்துவதற்கு புராரி பகுதியில், நிரான்கரி சமகம் மைதானத்தில் டெல்லி அரசு அனுமதி வழங்கி உள்ளது. ஆனால், சிங்கு, சம்பு மற்றும் திக்ரி எல்லை பகுதியிலும் விவசாயிகள் திரண்டிருந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். விவசாயிகளின் பேரணியால் பிற மாநிலங்களில் இருந்து டெல்லி செல்லும் போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது. தொடர் போராட்டத்தின் எதிரொலியாக சிங்கு எல்லையின் இருபுறமும் இன்று மூடப்பட்டது. திக்ரி எல்லை பகுதியும் வாகன போக்குவரத்துக்கு அனுமதி இன்றி மூடப்பட்டுள்ளது. பதுசராய் மற்றும் ஜதிகரா எல்லைகள் இரண்டு சக்கர வாகன போக்குவரத்துக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

அரியானா செல்லும் எல்லைகளான ஜரோடா, தன்சா, தவுராலா, கபாஷேரா, ரஜோக்ரி என்.எச். 8, பிஜ்வாசன், பாலம் விகார் மற்றும் தண்டஹேரா ஆகியவை திறந்து விடப்பட்டு உள்ளன. இதற்கிடையே, டெல்லி விஞ்ஞான் பவனில் இன்று மாலை 3 மணிக்கு பேச்சுவார்த்தைக்கு வரும்படி விவசாய அமைப்புகளின் தலைவர்களுக்கு மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் அழைப்பு விடுத்திருந்தார். இந்நிலையில் இந்த பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளப்போவதில்லை என்று பஞ்சாப் மாநில விவசாயிகள் சங்கம் சார்பில் காலையிலேயே அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ள போவதில்லை என்றும் போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என்றும் அனைத்திந்திய விவசாயிகள் சங்கம் சார்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விவசாயிகளின் ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் பேச்சுவார்த்தைக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்திருக்கிறது. பஞ்சாப் மாநில விவசாயிகளை அனைத்திந்திய சங்கத்தில் இருந்து தனிமைப்படுத்துவதற்கான முயற்சியில் மத்திய அரசு இறங்கியிருக்கிறது. எனவே மத்திய அரசின் இந்த கொடூரமான முயற்சிக்கு எங்களது கண்டனங்களை தெரிவித்து கொள்வதாகவும், தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல் மத்திய அரசுக்கு எங்களது கோரிக்கை என்னவென்றால் விவசாயிகளுக்கு எதிரான விவசாயிகளை நசுக்க கூடிய இந்த சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என்பதே எங்களது கோரிக்கையாக இருக்கிறது. அதுவரை எங்களது போராட்டம் என்பது ஜனநாயக வழியில் அமைதியான முறையில் நடைபெறும். மக்களும் அதற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் அனைத்திந்திய விவசாயிகள் சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: