×

ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் பதவி நீக்க கோரிய அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்!!

புதுடெல்லி: மூத்த நீதிபதி என்.வி.ரமணா மீது நேரடி அரசியல் குற்றச்சாட்டு வைத்த விவகாரத்தில் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களையும் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதி என்.வி.ரமணா மீது குற்றச்சாட்டு தெரிவித்து தலைமை நீதிபதி எஸ்,ஏ.பாப்டேவிற்கு ஆந்திர முதல்வர் ஜெகன்கோகன் ரெட்டி கடந்த மாதம் நேரடி அரசியல் குற்றச்சாட்டை முன்வைத்து பரபரப்பு கடிதம் ஒன்றை எழுதி அனுப்பியிருந்தார். அதில், நீதிபதி என்.வி.ரமணா தெலுங்கு தேசம் கட்சி தலைவரும், முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடுவுக்கு ஆதரவாக செயல்படுவதாக தெரிவித்திருந்தார்.

 இந்த நிலையில் மேற்கண்ட விவகாரம் தொடர்பாக வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி உச்ச நீதிமன்றத்தில் புதிய வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். அதில், மூத்த நீதிபதியான என்.வி.ரமணா விவகாரத்தில் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தனது அதிகார வரம்பை மீறியும், நீதிமன்ற மாண்பை குலைக்கும் விதமாகவும், ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை முன்வைத்தும் தவறான செய்திகளை ஊடகங்களில் தெரிவித்து வருகிறார். மேலும் முதல்வர் என்ற செல்வாக்கை அவர் சட்டத்திற்கு புறம்பாக பயன்படுத்துகிறார். குறிப்பாக ஜெகன் மோகன் ரெட்டி மீது பண மோசடி, ஊழல், 30க்கும் மேற்பட்ட கிரிமினல் வழக்குகள் உள்ளதால், அவர் முதல்வர் பதவியில் இருப்பதற்கே தகுதி இல்லாதவர். அதனால் அவரை பதவியை விட்டு நீக்க வேண்டும். மேலும் இந்த விவகாரத்தில் சிபிஐ உட்பட தன்னாட்சி அதிகாரம் கொண்ட ஒரு குழுவை அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். அதே போல், பிரதீப் குமார் யாதவ், எஸ்.கே.சிங் ஆகியோர், ‘முதல்வர் பொறுப்பிலிருந்து ஜெகன்மோகன் ரெட்டியை நீக்கவேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இதையடுத்து கடந்த 16ம் தேதி மனு விசாரணைக்கு வந்தபோது நீதிபதி யு.யு.லலித் வழக்கில் இருந்து தாமாக முன்வந்து விலகிக் கொண்டார்.

இந்த நிலையில் மேற்கண்ட வழக்கானது உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.கே.கவுல், தினேஷ் மகேஸ்வரி மற்றும் எச்.ராய் ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. இதையடுத்து வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி மனுவில் உள்ள சாராம்சங்களை நீதிபதிகள் முன்னிலையில் விளக்கமாக எடுத்துரைத்தார். ஆனால் அதனை நிராகரித்த அவர்கள், இந்த விவகாரத்தில் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி மூத்த நீதிபதி என்.வி.ரமணாவிற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியிடம் தான் நேரடி புகார் தெரிவித்துள்ளார். அதனால் அவரே இதில் முடிவை மேற்கொள்வார். இதில் நாங்கள் ரிட் மனுக்களை விசாரிக்க முகாந்திரம் இல்லை என தெரிவித்த நீதிபதிகள், ஜெகன் மோகன் ரெட்டிக்கு எதிரான அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டனர்.Tags : Supreme Court ,Jagan Mohan ,removal ,Andhra Pradesh , Andhra Pradesh Chief Minister, Jagan Mohan, Position, Petitions, Dismissal, Supreme Court
× RELATED ஆந்திர மாநிலம் முழுவதும் வீடுகளுக்கே...