×

தா.பழூர் பகுதியில் சாலையில் வேகத்தடைகளுக்கு வர்ணம் பூசும் பணி மும்முரம்

தா.பழூர்: தினகரன் செய்தி எதிரொலியால் தா.பழூர் அருகே வேகத்தடைகளுக்கு வெள்ளை வர்ணம் பூசும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. அரியலூர் மாவட்டம் தா.பழூர் பகுதியில் தார்ச்சாலை அமைக்கும் பணி நடந்தது. இதில் வி கைகாட்டியில் இருந்து அண்ணகாரன்பேட்டை வரை தார்ச்சாலை அமைக்கும் பணி நடந்தது. அதன்படி தா.பழூரில் இருந்து அண்ணகாரன்பேட்டை கிராமம் வரை பிள்ளையார்குளம், இடங்கண்ணி கிராமங்கள் வழியாகவும் சாலை அமைக்கப்பட்டது. இந்த சாலையில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் இருந்த வேகத்தடைகள் ஒருபுறமிருக்க தற்போது புதிதாக அமைக்கப்பட்ட வேகத்தடைகள் அதிகமாக உள்ளன.

இந்நிலையில் தார்ச்சாலை அமைத்து ஒரு மாதத்துக்கு மேலாகியும் இதுவரை எந்த வேகத்தடையிலும் வாகன ஓட்டிகளை எச்சரிக்கை படுத்தும் வகையில் வெள்ளை வர்ணங்கள் தீட்டப்படவில்லை. சாலையோரங்களில் வேகத்தடை உள்ளது என்ற அறிவிப்பு பலகையும் வைக்கவில்லை.

இதனால் இரவு நேரங்களில் வேகத்தடை இருப்பது தெரியாமல் வேகமாக சென்று வாகன ஓட்டிகள் காயமடைகின்றனர். இதுபோன்ற விபத்துகளை தடுப்பதற்கு வேகத்தடைகளுக்கு வெள்ளை வர்ணம் தீட்ட வேண்டுமென மாவட்ட நிர்வாகத்துக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த செய்தி தினகரன் நாளிதழில் வெளியானது. இதன் எதிரொலியாக அரியலூர் கோட்ட பொறியாளர் ராமச்சந்திரன் அறிவுறுத்தலின்படி, ஜெயங்கொண்டம் உதவி கோட்ட பொறியாளர் சிவராஜ், உதவி பொறியாளர் சண்முகசுந்தரம் மேற்பார்வையில் சாலை பணியாளர்களை கொண்டு வேகத்தடைக்கு வர்ணம் தீட்டும் பணி நடந்தது. இதனால் நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட தினகரன் நாளிதழுக்கும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பாராட்டு தெரிவித்தனர்.

Tags : road ,Dhaka ,area , Speed limit
× RELATED நாகர்கோவில் சாலைகளில் வேகத்தடைகளில்...