மிகப்பெரிய ஆன்மீகவாதியான நடிகர் ரஜினி என்ன முடிவு எடுத்தாலும் பாஜக வரவேற்கும்...எல்.முருகன் பேட்டி

சென்னை: நடிகர் ரஜினி என்ன முடிவு எடுத்தாலும் அதை பாஜக வரவேற்கும் என தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.கோடம்பாக்கத்திலுள்ள ரஜினியின் ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நேற்று ரஜினிகாந்த் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தை முடித்துக்கொண்டு போயஸ்கார்டன் வீடு திரும்பிய ரஜினி, செய்தியாளர்களிடம் கூறியதாவது: கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் அவர்களின் கருத்தை தெரிவித்தார்கள்.

 அரசியல் நிலைப்பாடு குறித்து எனது பார்வையை விளக்கி கூறினேன். நீங்கள் என்ன முடிவு எடுத்தாலும் உங்களுடன் இருப்போம் என்று அவர்கள் தெரிவித்தனர். எனது முடிவை விரைவில் அறிவிப்பேன். இவ்வாறு ரஜினிகாந்த் கூறினார்.

இந்நிலையில், ரஜினியின் அரசியல் குறித்து கருத்து தெரிவித்துள்ள தமிழக பாஜக தலைவர் எல். முருகன்,  ரஜினிகாந்த் மிகப்பெரிய ஆன்மீகவாதி: அவர் என்ன முடிவு எடுத்தாலும் அதை பாஜக முழு மனதுடன் வரவேற்கும் என்றார். மேலும், பாஜகவின் வேல் யாத்திரைக்கு தமிழகத்தில் இளைஞர்கள், பொதுமக்கள், ஆன்மீக பெரியோர்கள் மத்தியில் நாங்கள் எதிர்பார்த்ததைவிட மிகப் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.

டிச.7ஆம் தேதி திருச்செந்தூரில் வேல்யாத்திரை நிறைவு விழாவில் மத்தியப்பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் பங்கேற்கிறார். டிசம்பர் 5-ம் தேதி சுவாமிமலை, பழமுதிர்சோலை, திருப்பரங்குன்றத்தில் தரிசனம் செய்தபின் டிசம்பர் 7-ம் தேதி திருச்செந்தூரில் வேல்யாத்திரை நிறைவு பெறும் என்று தெரிவித்தார்.

Related Stories: