×

கருவேல மரங்கள் ஆக்கிரமிப்பு: நீர்நிலைகளில் தண்ணீர் வீணாகும் அபாயம்

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் நீர்நிலைகளில் ஆக்கிரமித்துள்ள கருவேல மரங்களால் தண்ணீர் வீணாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தின் அனைத்து விவசாய தரிசு நிலங்கள், கண்மாய்கள், நீர் வரத்து கால்வாய், விளை நிலங்களின் வரப்புகளிலும் கருவேல் மரங்கள் அதிக அளவில் ஆக்கிரமித்து வளர்ந்துள்ளன. காற்றில் உள்ள ஈரப்பதத்தை கூட உறிஞ்சி வளரும் தன்மை உடைய கருவேல் மரங்கள் நீர் நிலைகளில் தேங்கி நிற்கும் நீர், நிலத்தடி நீரை உறிஞ்சி செழித்து பரவி வருகின்றன. இதனால் விவசாயத்திற்கும், குடிநீருக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது.

கருவேல் மரங்களை முழுமையாக அகற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை சராசரியை விட கூடுதலாக பெய்துள்ளது. தொடர்ந்து பெய்தும் வருகிறது. இந்நிலையில் மாவட்டத்தில் உள்ள 1040 கண்மாய்களில் நூற்றுக்கும் மேற்பட்ட கண்மாய்கள் முற்றிலும் நிரம்பி உள்ளன. 300க்கும் மேற்பட்ட கண்மாய்களில் 50 சதவீத அளவிற்கு தண்ணீரும், 500க்கும் மேற்பட்ட கண்மாய்களில் 25 சதவீத தண்ணீரும் வந்துள்ளன. மழையினால் நிலத்தடி நீர் மட்டமும் உயர்ந்துள்ளன.

இந்நிலையில் நீர்நிலையை ஆக்கிரமித்துள்ள கருவேல் மரங்களால் கண்மாய்களில் உள்ள ஒட்டு மொத்த தண்ணீரும் ஒரு மாதத்திற்குள் வீணாகும் நிலை உருவாகி உள்ளது. தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில தலைவர் நாராயணசாமி கூறுகையில், விருதுநகர் மாவட்டத்தில் உள்ள நீர் வரத்து கால்வாய்கள், ஓடைகள், கண்மாய்கள், குளங்களை கருவேல மரங்கள் முழுமையாக ஆக்கிரமித்துள்ளன. மழை பெய்தும் வரும் தண்ணீர் விவசாயத்திற்கு பயன்படுத்த முடியாத அளவிற்கு கருவேல மரங்களால் வீணாகிறது. மாவட்ட நிர்வாகம் கருவேல் மரங்களை முழுமையாக அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Tags : water bodies , Water level, risk
× RELATED புழல் ஏரியில் நீர் இருப்பு அதிகம்...