×

ஆடியோ + வீடியோவுடன்... அரசுப் பள்ளி மாணவர்களுக்காக ஒரு மொபைல் app!

நன்றி குங்குமம்

ஈசியா படிக்கலாம்... கடைக்கோடி கிராமப்புறத்திலும் app-ஐ டவுண்லோடு செய்யலாம்

‘‘இன்னைக்கு கல்வி நம்பிக்கை தர்றதா இல்ல. குறிப்பா, கிராமப்புற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கல்வியைப் பார்த்து பயமிருக்கு. இதனால, குறிப்பிட்ட வகுப்புகளுக்குப் பிறகு மேல படிக்காம நின்னுடுறாங்க. அதுவும் கடைசி பெஞ்ச் மாணவர்கள் நமக்குக் கல்வி சரிப்பட்டு வராதுனே நினைக்கிறாங்க. அதனாலதான், எளிமையா புரிகிற மாதிரி கல்வி இருக்கணும்னு இந்த app-ஐ உருவாக்கினேன்...’’ நம்பிக்கை துளிர்க்க பேசுகிறார் பிரேம்குமார். திருச்சியைச் சேர்ந்த இவர், ஜெர்மனியில் ஐடி நிறுவனத்தில் பணியாற்றியவர். இப்போது தன் பணியை ராஜினாமா செய்துவிட்டு அரசுப் பள்ளி மாணவர்களின் கல்விக்காகவே உழைத்து வருகிறார். அவர்களுக்கென ‘கல்வி40’ என்கிற இலவச மொபைல் app-ஐ உருவாக்கி தன்னம்பிக்கை அளித்திருக்கிறார். இதை அரசுப் பள்ளி ஆசிரியர்களின் உதவியுடன் சில பள்ளிகளில் செயல்படுத்தியும் வருகிறார். ‘‘பள்ளிப் படிப்பை திருச்சில முடிச்சுட்டு கோவை பிஎஸ்ஜி தொழில்நுட்பக் கல்லூரில எஞ்சினியரிங் படிச்சேன். நான்காண்டுகள் பணியாற்றிவிட்டு, பிஐஎம்-மில் எம்பிஏ முடிச்சேன். பிறகு, ஐடி பணிக்கு வந்தேன். தொடர்ச்சியா ஜெர்மனி, லண்டன், சிங்கப்பூர்னு வெளிநாடுகள்ல வேலை செய்தேன். திருமணமாச்சு. குழந்தைகள் பிறந்தாங்க. அப்பப்ப ஊருக்கு வந்திட்டு போவேன். அப்ப வெளிநாடுகளுடன் நம்ம நாட்டை ஒப்பிடுவேன். ஏன் அங்க மாதிரி இங்க இன்னும் மாறலைனு ஒரு கோபம் வரும். நம்மால முடிஞ்சதைப் பண்ணணும்னு நினைப்பேன். அப்பதான் ஒரு ஸ்டார்ட்அப் கம்பெனியை நண்பருடன் சேர்ந்து ஆரம்பிச்சேன். இன்னைக்கு பிரச்னை அதிகமா இருக்குறது விவசாயிகளுக்குதான். அதனால, அவங்க பிரச்னைகளைத் தீர்க்க 2017ல விவசாயம் சார்ந்த திட்டத்தைக் கையிலெடுத்தேன். ஆனா, சில பிரச்னைகளால் அது நின்னுடுச்சு.

ஏதாவது பண்ணணும்ங்கிற ஆர்வம் என்னை துரத்துச்சு. இதனால, 2017ல ஜெர்மனியில் இருந்து குடும்பத்துடன் ஊருக்கு வந்துட்டேன். நான் கிராமத்துல வளர்ந்தவன் இல்ல. அதனால, கிராமம் பத்தியும், இயற்கை விவசாயம் பத்தியும் புரிதல் வேணும்னு கரூர் அருகே நம்மாழ்வார் ஐயாவின் வானகத்துல மூணு நாள் தங்கி இயற்கை விவசாயம் பத்தி பயிற்சி எடுத்தேன். பிறகு, விவசாயம் பத்தின விஷயங்களைப் புரிஞ்சிக்க இந்தியா முழுவதும் பயணம் செய்தேன். அப்ப 2018ல ஒரு முக்கிய பிரச்னையா நான் பார்த்தது இன்னும் குழந்தைங்களுக்குத் தரமான கல்வி கொடுக்கப்படலை என்பதைத்தான். கல்வி நம்பிக்கை தர்றதா இல்லனு தோணுச்சு. நான் சாதாரண நடுத்தர வீட்டுப் பையன். அப்படியிருந்தும் என்னால வெளிநாடு போய் வேலை பார்த்து வசதியா வாழ முடியுதுனா, அதுக்கு கல்விதான் காரணம். அதனால, முதல்ல கிராமத்துக் குழந்தைங்களுக்கு ஆங்கிலம் கற்றுத்தர சின்னதா ஒரு app ரெடி பண்ணினேன். பொதுவா, மத்தவங்ககிட்ட ஆங்கிலத்துல பேச தயக்கமும் கூச்சமும் இருக்கும். ஆனா, appல இருக்காதுனு உருவாக்கினேன். இந்த app பேசும்போது தவறு இருந்தா சுட்டிக்காட்டும். இதை திருப்போரூர் பக்கத்துல ஒரு கிராமத்துல போய் செக் பண்ணி பார்த்தேன். வேலை செய்யல. ஏன்னா, நெட்வொர்க் கிடைக்கல. அதனால, எது செய்தாலும் சைஸ் கம்மியா பண்ணணும்னு முடிவெடுத்தேன். அடுத்து, ஆங்கிலத்துடன் மற்ற மொழிகளையும் பண்ணலாம்னு தோணுச்சு. திருப்போரூர், காஞ்சிபுரம் பகுதிகள்ல சில ஆசிரியர்களைச் சந்திச்சேன். அப்ப இன்னொரு புரிதல் கிடைச்சது. இன்னைக்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மட்டும் அரசுப் பள்ளிகள்ல சுமார் 70 லட்சம் குழந்தைகள் படிக்கிறாங்க.

இதுல கிராமத்துப் பள்ளிகள்ல மட்டும் 39 லட்சம் குழந்தைகள் இருக்காங்க. இவங்களுக்கு பாடத்திட்டத்துடன் மற்ற மொழிகளையும், திறன் மேம்பாட்டுப் பயிற்சியையும் கொடுக்கணும்னு தீர்மானிச்சேன். அப்படிதான் இந்த ‘கல்வி40’ app-க்கான கருத்துரு உருவாச்சு...’’ புன்னகைக்கும் பிரேம்குமார், நிதானமாகத் தொடர்ந்தார்.  ‘‘இதை எந்த லாப நோக்கமும் இல்லாத ஒரு திட்டமா முன்னெடுக்கணும்னு ஆசைப்பட்டேன். ஆனா, அது ரொம்ப கஷ்டம்னு நண்பர்கள் எச்சரிக்கை செய்தாங்க. நாட்கள் ஆனாலும் சிறப்பா உருவாக்கணும்னு என் கைக் காசைப் போட்டு பண்ணினேன். இதுக்கு ஆசிரியர்களின் ஒத்துழைப்பு அவசியமா இருந்துச்சு. அப்ப ஒருத்தர் காஞ்சிபுரத்துல அரசுப் பள்ளி ஆசிரியர்கள் இணைந்திருக்கிற டிஜிட்டல் டீம் குழு ஒண்ணு இருக்குனு சொன்னார். அவங்கள சந்திச்சதும் ஆர்வமாகி கட்டாயம் உதவுறோம்னு சொல்லி நாற்பது வீடியோவுக்கான உள்ளடக்கத்தை ஆசிரியர்கள் தயாரிச்சு தந்தாங்க. அதை appல போட்டு பதினைஞ்சு கிராமங்கள்ல போய் டவுண்லோடும் இன்ஸ்டாலும் பண்ணி, வேகம் எப்படி இருக்குனு ஒரு ஃபீட்பேக் எடுத்தோம். வேகமா டவுண்லோடு ஆச்சு. நல்ல வரவேற்பும் கிடைச்சது. இது கடந்த 2019 ஜனவரியில் நடந்துச்சு. இதுக்காக வீடியோ சைஸை குறைச்சோம். அடுத்து, நாங்க மூணு முக்கிய குறிக்கோளுடன் கல்வி app-பை உருவாக்க முடிவெடுத்தோம். முதல்ல, தமிழ் வழியில் படிக்கிற அரசுப் பள்ளி குழந்தைங்களுக்கு மட்டுமே app இருக்கணும்னு தீர்மானிச்சோம். ரெண்டாவதா அரசுப்பள்ளியில் படிக்கிற குழந்தைகள்ல கடைசி பெஞ்ச் மாணவர்களைத் தூக்கிவிடணும்னு நினைச்சோம். அவன்ட்ட ஒரு பத்து நிமிடம் வகுப்பு எடுத்தா கேட்கமாட்டான். அதனால, எல்லா வீடியோவும் மூணு நிமிடமே இருக்குறமாதிரி உருவாக்க உறுதியானோம்.

இதுல, அரசுப் பள்ளி பாடத்திட்டத்துல இருக்குற பாடங்களை 20 தலைப்புகளா பிரிச்சோம். அதை வீடியோ பண்ணி அதன் சைஸை 4MB ஆக சுருக்கி, பார்க்கிற மாதிரியான குவாலிட்டியுடன் செய்தோம். இதனால, எந்த கிராமப்புறப் பகுதிகள்ல நின்னு செய்தாலும் டவுண்லோடு ஆகும்.மூணாவதா 3வது முதல் 8வது வரை உள்ள குழந்தைங்களுக்கு மட்டும் இந்த app-பை உருவாக்கினோம். டிஜிட்டல் என்பது ரொம்ப சின்ன குழந்தைகளுக்குத் தேவையில்ல. ஏன்னா, அவங்களுக்கு இயற்கையுடன் சொல்லித் தந்தாலே புரிஞ்சுப்பாங்க. பொதுவா, இடைநிற்றல் விகிதம் எட்டாம் வகுப்புக்குப் பிறகே அதிகரிக்குது. அதைக் குறைக்க  எட்டாம் வகுப்பு வரை நல்ல கல்வியா புரியறமாதிரி கொடுத்தா இடைநிற்றல் இருக்காது. இந்த app-பை தொழில்ரீதியா வடிவமைக்க ஒரு சிறிய நிறுவனத்துக்கு அவுட்சோர்ஸ் செய்தோம். appல சின்னச் சின்ன விஷயங்களைக் கூட எளிய வடிவமைப்பில் பண்ணினோம். கலர்ஸ் கூட கிரே, லைட் புளூ மாதிரிதான் பயன்படுத்தினோம். ஏன்னா, குழந்தைகளின் கவனம் இந்த வண்ணங்கள் பக்கம் போய் சிதறிடக்கூடாதுனு இந்தமாதிரி செய்தோம்...’’ என விவரித்தவரிடம் ‘கல்வி40’ பெயர்க் காரணம் கேட்டோம். ‘‘திருக்குறள்ல அதிகாரம் 40ல் மற்ற செல்வத்தைவிட கல்விதான் சிறப்பான செல்வம்னு வள்ளுவர் சொல்லியிருப்பார். அதனால, கல்விச் செல்வத்தை கிராமத்திற்குக் கொண்டு போய்ச் சேர்க்கணும் என்பதுக்காக ‘கல்வி40’னு பெயர் வச்சோம். எங்க app மொத்தமே 13 MBதான். அதனால, எளிதா டவுண்லோடு செய்யலாம். மாணவர்களும், பெற்றோரும், ஆசிரியர்களும் எளிதா அணுகலாம். ஒரு வீட்டுல ரெண்டு மாணவர்கள் இருந்தாலும் அவங்க பெயர் கொடுத்து உள்ள போகலாம்.

அவங்க என்ன வகுப்போ அதுக்கான பாடத்திட்ட வீடியோ மட்டும் அவங்களுக்கு வரும். ஆசிரியர்கள் எல்லா வகுப்பு வீடியோக்களையும் பார்க்கலாம். இந்த app-பை 2019ம் ஆண்டு மே மாசம் முடிச்சோம். இந்த app டிசைன் நடக்கும்போதே உள்ளடக்கத்திற்கான பணிகளையும் செய்தோம். இதுல நாங்க ஐந்து விஷயங்கள்ல கவனம் செலுத்தினோம். வீடியோ மூலம் சொல்லித் தர்றது முதன்மையானது. அதனால, எங்களுடைய டேக்லைனே ‘எளிய வழியில் புதுமைக் கல்வி’ என்பதுதான். அடுத்து, பயிற்சித் தேர்வுகள். அதாவது ஆன்லைன் தேர்வு. இதுல கற்பதை மாணவனே பரிசோதிக்கலாம். இதன் உள்ளே ஒரு பிரிவின் கீழ் தேர்வு எழுதினா, அதுக்கான முடிவு உடனே தெரிஞ்சிடும். அதேபோல மாணவர்கள் என்ன தப்பு பண்ணியிருக்காங்கனும் பார்த்துக்கலாம். மூணாவதா போட்டித் தேர்வு. ஒரு போட்டித் தேர்வுக்கு போனா டைமர் வேணும். இதுல கேள்விகள் கொடுத்ததும் பின்னாடி டைமர் ஓடும். இந்த மூணும் அந்தந்த வகுப்புகளின் பாடத்திட்டம் சார்ந்து அமைச்சோம். நான்காவதா சிந்தனைத் திறனை வளர்க்க ஒரு பிரிவை உள்ளடக்கத்துல வச்சோம். அதாவது, ஒவ்வொரு நாளும் ஒரு விடுகதை போடுறது. அதுக்கான பதிலை மறுநாள் சொல்றதுனு பண்ணினோம். இதை ஆடியோவாகவும், கீழே எழுத்து வடிவிலும் தர்றோம். ஐந்தாவதா, ஒவ்வொரு நாளும் ஒரு நீதிபோதனை கதை சொல்வோம். இதுவும் ஆடியோவில் வரும். தவிர, காகிதம் மடித்தல், பல்வேறு மொழிகள் கற்றல்னும் செய்திருக்கோம். இதுல பாடத்திட்டம் எல்லாம் தமிழக அரசு 2019ல் கொண்டுவந்த புதுப் பாடத்திட்டம்தான். புத்தகத்துல என்ன பார்ப்பாங்களோ அதுவே வீடியோவா இருக்கும். ஆரம்பத்துல காஞ்சிபுரத்துல இருக்குற பதினைஞ்சு ஆசிரியர்களுடன் இணைஞ்சு வீடியோ பண்ணினேன். கொரோனா தொடங்கியதும் நண்பர்கள் மூலம் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை அணுகினோம்.

கத்தார், மலேசியா, ஜப்பான், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள்னு பல இடங்கள்ல இருந்து நிறையபேர் முன்வந்தாங்க. நாங்க அறிவியல்ல பாடம் நம்பர் 2னு சொல்லி பிடிஎஃப் ஃபைலா அவங்ககிட்ட கொடுப்போம். அதைப் படிச்சு புரிஞ்சுக்சுகிட்டு ஆடியோவா தாங்கனு சொல்லிடுவோம். அவங்க அதேமாதிரி செய்து கொடுப்பாங்க. ஆனா, குழந்தைங்களுக்கு ஆடியோவா மட்டுமில்லாமல் வீடியோவாகவும் பார்த்தால்தான் மனசுல பதியும். அதனால, ஆசிரியர்கள் பேசின ஆடியோவுக்கு ஏற்ற இமேஜ் எடுத்து வீடியோவா பண்ணித்தாங்கனு கேட்டோம். தவிர, முக்கிய வார்த்தைகளை அந்த வீடியோவின் கீழே வர்ற மாதிரி வேணும்னு சொல்லி அதையும் வாங்கினோம். ஆக, குழந்தைகள் இமேஜையும் ஆடியோவையும், கீழே வர்ற முக்கிய வார்த்தைகளையும் பார்க்கும்போது ரொம்ப எளிமையா அந்தப் பாடத்ைதப் புரிஞ்சுப்பாங்க. இப்படியா, இரண்டாயிரம் ஆடியோவுடன் வீடியோ இருக்கு. இன்னைக்கு 25 ஆயிரம் பேர் எங்க app-பை டவுண்லோடு செய்திருக்காங்க. கொரோனா காரணமாக இதைத் தெரிஞ்ச அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மூலம் முன்னெடுத்திட்டுப் போறோம்...’’ என்கிற பிரேம்குமாரிடம் எதிர்காலத் திட்டம் பற்றிக் கேட்டோம். ‘‘இப்ப 2400 வீடியோக்கள் பண்ணியிருக்கோம். இன்னும் ஆறு மாசத்துல பத்தாயிரம் வீடியோவா ஆக்கணும். அப்புறம், ஒரு லட்சம் பேர் டவுண்லோடு செய்யற மாதிரி பணியாற்றிட்டு வர்றோம். கடைக்கோடியில் உள்ள கிராமப் பள்ளிக் குழந்தைங்களுக்கும் எங்க app போய்ச் சேரணும். அதுக்காக, எல்லா மாவட்ட பள்ளிகளுக்கும் கொண்டு போறதுக்கான பணிகளைச் செய்திட்டு இருக்கோம்...’’ என்கிறார் பிரேம்குமார்.       

தொகுப்பு: பேராச்சி கண்ணன்

Tags : government school students , Audio, video, public school students, mobile app
× RELATED உயர் படிப்புக்கு நுழைவு ேதர்வு எழுத சிறப்பு பயிற்சி துவக்கம்