×

கண்ணீர் வடிக்கும் கல்வராயன்மலை பழங்குடி விவசாயிகள்: கைக்கான் வளவு திட்டத்தால் பறிபோகுது வாழ்வாதாரம்

சேலம்: ஒருபெரும் திட்டம் நிறைவேற, சில சிறுகட்டமைப்புகள் தகர்க்கப்படுவது தவிர்க்க முடியாத ஒன்று. ஆனால் அந்த சிறுகட்டமைப்புகளை வாழ்வாதாரமாக நம்பி இருப்போருக்கு வழிகாட்ட வேண்டியது அரசின் கடமை. இந்த வகையில் கரியகோயில் அணைக்கு நீர்வார்க்கும் கைக்கான்வளவு திட்டத்திற்காக மலைவாழ் பழங்குடியின விவசாயிகள் பலரது வாழ்வதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. அவர்களின் குரலும் ஓடுக்கப்பட்டுள்ளது. இப்படி ஒடுக்கப்பட்வர்களின் குரலாக ஒலிக்கிறது இந்த பதிவு.

சேலம் மாவட்டத்தில் நீண்ட நாட்களாக நிரம்பாமல் கிடக்கும் அணைகளில் ஒன்றாக கரியகோயில் அணை உள்ளது. கைக்கான்வளவு காட்டாற்றின் உபரிநீரை வீணாகாமல் தடுத்து, கரியகோயில் அணைக்கு திருப்பும் திட்டத்திற்கு அரசு ரூ.7.30கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. நீரை கரியகோயில் அணைக்கு திருப்புவதற்காக 30மீட்டர் நீளமும், 2மீட்டர் உயரமும்  கொண்ட தடுப்பணை அமைக்கப்படும் என்றும், 500 மீட்டர் நீள கால்வாய் வெட்டப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. சமவெளி பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு இந்த திட்டம் சாதகமாக அமைந்தாலும், மலைகிராமங்களில் உள்ள பழங்குடியின விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கி விடும் என்ற சர்ச்சை எழுந்துள்ளது.

பாப்பநாயக்கன்பட்டியில் உள்ள கரியகோயில் அணைக்கு, சுற்றியுள்ள மலைக்குன்றுகளிலிருந்து 7 நீரோடைகள் வழியாக இயற்கையாக தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் கல்வராயன் மலைப்பகுதியில் உற்பத்தியாகும் பெரியாறு என்ற காட்டாறு நீரை திருப்புவதற்கான திட்டத்திற்கு 2013ம் ஆண்டு அச்சாரம் போடப்பட்டது. தற்போதைய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அப்போது பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தார். அடுத்தடுத்த ஆண்டுகளில் இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்காக அரசு, எந்தவிதமான நடவடிக்கைளையும் மேற்கொள்ளவில்லை.

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு, இதற்கான பணிகள் துரிதகதியில் நடந்து வருகிறது. இந்த காட்டாறு என்பது கல்வராயன் மலைப்பகுதிகளுக்கு உட்பட்ட தெற்குநாடு, வடக்குநாடு, மணியார்குண்டம் பகுதிகளிலுள்ள ஆயிரக்கணக்கான பழங்குடியின விவசாயிகளின் நிலங்களுக்கான நீராதாரமாகும். இந்த நீரை நம்பியே 30ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளது. இதேபோல் கல்வராயன் மலையை ஒட்டி வாழும் கள்ளக்குறிச்சி மாவட்ட மலைவாழ் பழங்குடியின விவசாயிகளுக்கும் இந்த காட்டாறே நீராதாராமாக உள்ளது. இப்படிப்பட்ட சூழலில் இந்த காட்டாற்று நீரை முழுமையாக கரியகோயில் அணைக்கு கொண்டு செல்வதற்கு திட்டமிட்டுள்ளனர். அதற்கான தடுப்பணை மற்றும் கால்வாய் வெட்டுவதற்காக இங்குள்ள பழங்குடியின விவசாயிகளின் விளைநிலங்களை  கையகப்படுத்தி வருகின்றனர். இந்த வகையில் நிலம் இழக்கும் விவசாயிகள், தங்கள் ஆட்சேபனையை தெரிவித்தனர். ஆனாலும், அவர்களின் குரல் எடுபடாமல் போய்விட்டது. இது குறித்து மலைவாழ் பழங்குடியின விவசாயிகள் கூறியதாவது:

கல்வராயன் மலையில் ஆரம்பூண்டி, வாழம்பூண்டி மலைக்குன்றுகளிலிருந்து உருவாகி கீழ்நோக்கி ஓடுவது தான் பெரியாறு என்னும் காட்டாறு. இது இயற்கையாக அமைந்த வழித்தடங்களில் 4 கிலோ மீட்டர் பயணித்து மேற்கில் பாய்ந்து கைக்கான் வளவு என்ற கிராமத்தில் ஒரு சிறு தடுப்பணையில் தேங்குகிறது. பிறகு வடக்கு நோக்கி பாய்ந்து, மீண்டும் கிழக்கு நோக்கி திரும்பி, 20கிலோ மீட்டர் பயணிக்கிறது. இந்த நீரானது பெரியாற்றின் இருகரைகளிலும் உள்ள கிணறுகளுக்கு நிலத்தடி நீராதாரமாகவும் உள்ளது.

மேலும், காட்டாறு ஒடும் பகுதியானது கல்வராயன் மலையின் பல்லுயிர் பெருக்கம் நிறைந்த வனவிலங்குகளின் வாழ்விடமாகவும், இயற்கையோடு சுற்றுச்சூழல் மேம்பட்ட பகுதியாகவும் உள்ளது. மழைக்காலத்தில் மட்டுமே காட்டாறு நிரம்பி தண்ணீர் உபரியாகிறது. அந்த தண்ணீரே இதர நாட்களில் நிலத்தடி நீர்மட்டம் நல்ல நிலையில் இருப்பதற்கு காரணமாகிறது. அதனை அப்படியே வாய்க்கால் வெட்டி, கரியகோயில் அணைக்கு திருப்பி விட்டால் பழங்குடியின விவசாயிகளின் நிலங்கள் அனைத்தும் பாழாகி விடும். சுற்றுச்சூழல் மேம்பாட்டுக்கும் உலை வைத்து விடும்.கரியகோயில் அணையை நம்பியிருக்கும் விவசாயிகளுக்கு புதிய திட்டத்தால் நீர் கிடைப்பதற்கு நாங்கள் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. அவர்கள் பலஆண்டுகளாக  கோரிக்கை வைத்தும் இந்த திட்டம் நிறைவேற்றப்படவில்லை. அதே நேரத்தில் ஆளுங்கட்சியின் பெரும்புள்ளிகள் சிலர், கடந்த சில ஆண்டுகளில் கரியகோயில் அணையை சுற்றி நிலம் வாங்கியுள்ளனர். நூற்றுக்கணக்கான ஏக்கரில் அவர்கள் வாங்கிய நிலங்கள், தற்போது பினாமிகள்  பெயரில் உள்ளது. இந்த நிலங்களை வளப்படுத்தவே தற்போது கைக்கான்வளவு காட்டாறு உபரிநீர் பயன்பாடு என்ற பெயரில் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

பலஏக்கர் நிலம் வைத்திருப்பவர்கள் பயன்பெறும் திட்டத்திற்காக ஒரு ஏக்கர், இரண்டு ஏக்கரில் விவசாயம் செய்து பிழைப்பு நடத்தும் எங்கள் வாழ்வாதாரத்திற்கு உலை வைக்கிறார்கள். அதிலும் நாங்கள் பிழைப்பு நடத்தும் இடத்தை கையகப்படுத்தி, விளைநிலங்களை அழித்து தடுப்பணையும், நீர்வழித்தடமும் உருவாக்குகின்றனர். சமீபத்தில் நிலம் கையகப்படுத்த வந்த அதிகாரிகளிடம் இது குறித்து கேள்வி கேட்டவர்களை அதிரடியாக கைதும் செய்தனர். இதனால் அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் தவித்து வருகிறோம். பெரும்செல்வந்தர்களுக்கான  திட்டம் என்பதால் எங்கள் குரல் எடுபடாமல் போய்விட்டது. இவ்வாறு விவசாயிகள் கூறினர்.

Tags : Kalwarayanmalai Tribal Farmers , Gaikon valavu plan
× RELATED சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள...