×

1992 வெள்ளத்தின் போது விநாடிக்கு 1.40 லட்சம் கன அடி தண்ணீர் வெளியேறிய ஸ்ரீவை. அணை

ஸ்ரீவைகுண்டம்: புரேவி புயல் எச்சரிக்கை விடப்பட்டுள்ள நிலையில் தாமிரபரணியின் கடைசி அணைக்கட்டு அமைந்துள்ள ஸ்ரீவைகுண்டம் பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. 1992ம் ஆண்டு வெள்ளத்தின் போது 1.40 லட்சம் கன அடி தண்ணீர் ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டில் இருந்து வெளியேறியதால், மழை, வெள்ளத்தால் பாதிப்புகள் ஏற்படும் இடங்களை வருவாய் துறை அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

வற்றாத ஜீவ நதியாகத் திகழும் தாமிரபரணி, நெல்லை தூத்துக்குடி மாவட்டங்களில் பாய்ந்தோடி பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை வளம் பெறச் செய்து பல லட்சக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரமாகவும் விளங்குகிறது. நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர் மாவட்ட மக்களின் குடிநீர் தேவையையும் பூர்த்தி செய்வதில் முக்கியப் பங்காற்றுகிறது. இருப்பினும் இந்நதி வழியாக ஆண்டுதோறும் மழைக்காலங்களில் கிடைக்கும் தண்ணீர் தாமிரபரணியின் கடைசி அணைக்கட்டான ஸ்ரீவைகுண்டம் அணையைத் தாண்டி வினாடிக்கு பல்லாயிரக்கணக்கான  கன அடி தண்ணீர் வீணாக கடலுக்கு செல்வது தொடர் கதையாக உள்ளது.

குறிப்பாக கடந்த 1992ம் ஆண்டு ஏற்பட்ட புயல் காரணமாக தாமிரபரணி நதியில் ஸ்ரீவைகுண்டம் அணையைத் தாண்டி வினாடிக்கு ஒரு லட்சத்து 40 ஆயிரம் கன அடி தண்ணீர் வீணாக கடலுக்குச் சென்றது. அப்போது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கொங்கராயகுறிச்சி, ஆறாம்பண்ணை, மணக்கரை, தோழப்பன்பண்ணை மற்றும் தெற்கு தோழப்பன்பண்ணை பகுதியில் உள்ள விளை நிலங்களிலும் வெள்ள நீர் பாய்ந்து விவசாயிகளுக்குப் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது.
இதேபோல் ஸ்ரீவைகுண்டம் அணையின் தென்கால் வாய்க்காலில் இருந்து ஆதிநாதபுரம், மளவராயநத்தம் பகுதிகளிலும் உள்ள விளை நிலங்களையும்  முழுவதுமாக சேதப்படுத்தியது. அத்துடன் ஸ்ரீவைகுண்டம் அருகே  கேடிகே நகர் மற்றும் முக்காணி ஆத்தூர், பகுதிகளில் குடியிருப்புப் பகுதியிலும் தண்ணீர் புகுந்து சேதத்தை ஏற்படுத்தியது.

கடந்த 2018ம் ஆண்டில் பாபநாசம் மற்றும் மணிமுத்தாறு அணைகளில் இருந்து அதிக அளவு தண்ணீர் முறையான அறிவிப்புகள் ஏதும் இன்றி தாமிரபரணி ஆற்றில் திடீரென திறக்கப்பட்டதால் செய்துங்கநல்லூர் அருகே உள்ள கலியாவூர் தாமிரபரணி ஆற்றுப் பகுதியில் மேய்ச்சலுக்கு சென்றிருந்த 100க்கும் மேற்பட்ட மாடுகள் மழை வெள்ளநீரில் அடித்துச் செல்லப்பட்டது. தகவலறிந்து விரைந்து வந்த அப்போதைய தாசில்தார் தாமஸ் அருள் பயஸ் தலைமையிலான வருவாய்த் துறையினரும், தீயணைப்பு துறையினரும் இணைந்து அப்பகுதி மக்களும் இணைந்து ஆற்று வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்ட 100க்கும் மேற்பட்ட மாடுகளில் ஒரே ஒரு மாட்டை தவிர மற்ற அனைத்து மாடுகளையும் மீட்டனர்.இந்நிலையில் 92ம் ஆண்டு ஏற்பட்ட புயல் வெள்ள பாதிப்புகள் அளவிற்கு தற்போது மையம் கொண்டுள்ள புயலால் பாதிப்புகள் இருக்கும் என வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் மழை, வெள்ள பாதிப்புகளை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தூத்துக்குடி கலெக்டர் செந்தில்ராஜ் உத்தரவின்படி ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் கோபாலகிருஷ்ணன் தலைமையில் வருவாய் துறையினர், ஸ்ரீவைகுண்டம் வட்டாரத்தில் மழை, வெள்ளத்தால் பாதிப்பு ஏற்படும் இடங்களை பார்வையிட்டு ஆய்வு  மேற்கொண்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றனர்.

Tags : floods , Srivaikuntam
× RELATED ஆப்கனில் கடும் வெள்ளம்: 33 பேர் பலி